சாமுண்டீஸ்வரி தொகுதியின் சாபம்: காங்கிரஸின் தோல்விக்கு முக்கியமான ஆறு காரணங்கள்

சாமூண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியோடு தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற சித்தராமையாவின் கனவு பொய்யானது.
சாமுண்டீஸ்வரி தொகுதியின் சாபம்: காங்கிரஸின் தோல்விக்கு முக்கியமான ஆறு காரணங்கள்


சாமூண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததன் மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியோடு தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற சித்தராமையாவின் கனவு பொய்யானது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சாமூண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, வெற்றி பெற வேண்டும் என்று சித்தராமையா விரும்பினாலும், சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அவரது அரசியல் வரலாற்றில் சந்தித்த மிக மோசமான தோல்வியாக அமைந்துவிட்டது. நல்லவேளை பதாமி தொகுதியில் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.

சாமூண்டீஸ்வரி தொகுதியில் இதுவரை 8 முறை போட்டியிட்டிருக்கும் சித்தராமையா, 1989 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். 2018ல் மீண்டும் தோல்வியே கிட்டியுள்ளது.

எனினும், சாமூண்டீஸ்வரி தொகுதி மீது சித்தராமையாவுக்கு எப்போதும் ஒரு செண்டிமென்ட் உண்டு. அதற்குக் காரணம் 2006ல் தனக்கு அரசியலில் மறுஜென்மம் அளித்த தொகுதி என்பதால்.

ஆனால், அதனை பயன்படுத்திக் கொள்ள சித்தராமையா தவறிவிட்டார். அந்த தொகுதி மக்களுக்கும், தனக்கும் இருந்த ஒரு உறவு பாலத்தை அவர் பராமரிக்கவில்லை. தங்கள் தொகுதிக்கு முதல்வர் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை பொய்யானது. அடுத்தமுறை வருணா தொகுதிக்குத் தாவினார். 

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சாமூண்டீஸ்வரி தொகுதிக்குத் திரும்பியதில் தவறில்லை. ஆனால் அங்கிருந்த கட்சித் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் இடையேயான நல்லுறவை பலப்படுத்தாமல் விட்டதே தவறு. அடிமட்டத் தொண்டர்களை சந்தித்து, அவர்களுக்கு உற்சாகமளித்து, வெற்றிக் கனியைப் பறிக்கும் முனைப்பை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டார். இதனை மதசார்பற்ற ஜனதா தளம் நன்றாகவே செய்திருந்தது.

சாமூண்டீஸ்வரி தொகுதியின் தற்போதையை நிலையை கருத்தில் கொள்ளாமலேயே அதனை சித்தராமையா தேர்வு செய்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் புலம்பினார்கள். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அவர் முக்கியத் தொகுதிகளில் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல இடங்களில் மூத்த தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்.

அதிக நம்பிக்கை அதீத தோல்வி
தன் மீதும், கட்சியின் மீதும் கொண்ட அதீத நம்பிக்கைக் காரணமாக, சாமூண்டீஸ்வரி தொகுதியில் வெறும் 16 நாட்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும், அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்துப் பேசுவது, மூத்த மற்றும் இளைஞர் அமைப்பினரை சந்தித்து குறைகளைக் கேட்டறிவது போன்றவற்றில் ஈடுபடவில்லை. இதையெல்லாம் வழக்கம் போல மஜத செய்தது.

அவரது உறுதியான வாக்குகள் கூட, ஜாதி ரீதியிலான பிரசாரங்களால் உடைந்து தூள் தூள் ஆகின. இதில்லாமல், தலித் அமைப்புகள் பலவும், சித்தராமையாவை தலித்துகளுக்கு எதிரானவர் என பிரசாரம் செய்ததால், தலித்துகளின் வாக்குகள் மஜதவுக்கு பறந்தன.

அதற்கு வலுவான காரணமும் இருந்தது. அதாவது, 2013ம் ஆண்டு தேர்தலில் தலித் ஒருவர் முதல்வராகக் கூடாது என்று சித்தராமையா தடுத்தது நினைவில் கொள்ளத்தக்கது.

இதையெல்லாம் தாண்டி, காங்கிரஸ்காரர்களே சிலர் சித்தராமையாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியுள்ளனர். மேற்கண்ட பல காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்கான கணிசமான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் மஜத வேட்பாளர்களின் பைகளை நிரப்பியது. சித்தராமையாவுக்கு எதிரான அனைத்து வாய்ப்புகளையும் தேவேகௌடா தலைமை நன்கு பயன்படுத்திக் கொண்டது. 

இதற்கெல்லாம் மேலாக, லிங்காயத் தலைவர் என்று எடியூரப்பாவை சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின் போது விமரிசித்தது, அவருக்கு எதிராகவே திரும்பியது. அதுவும் நேராக மஜதவுக்கே மடை திறக்கப்பட்டது.

தலித்துகளுக்கு எதிரானவர் என்ற பிரசாரம், அதீத நம்பிக்கை, பிரசாரத்தில் தொய்வு, கள நிலவரத்தை ஆராயாமல் தேர்வு செய்தது, உட்கட்சி பூசல், மஜதவின் களப்பணிகள் போன்றவை சித்தராமையாவின் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டன. 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 38 சதவீத வாக்குகளைப் பெற்றும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் தோல்வி முகம் காட்ட மறைமுகக் காரணங்களாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com