பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் வருகை:  இணைய சேவை ரத்து; பள்ளி கல்லூரிகள் மூடல் 

பிரதமர் மோடியின் ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் வருகை:  இணைய சேவை ரத்து; பள்ளி கல்லூரிகள் மூடல் 

ஸ்ரீநகர்: பிரதமர் மோடியின் ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சனிக்கிழமை பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். லடாக் பகுதியில் உள்ள லே விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் வோரா மற்றும் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகிய இருவரும் வரவேற்றனர் 

அவரது வருகையையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்ரீநகர், லே இடையேயான நெடுஞ்சாலையில் ஜோஜிலா சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் இருவேறு சாலை திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பிரதமர் மோடியுடன் செல்லவிருக்கிறார். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 330 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் கிசென்கங்கா மின்சார திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

14 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் ஜோஜிலா சுரங்கப் பாதை, நாட்டிலேயே நீளமானதாகவும், ஆசியாவிலேயே நீளமான இருவழி சுரங்கப் பாதையாகவும் இருக்கும். எந்தவிதமான தட்பவெப்ப சூழ்நிலையிலும் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த சுரங்கப் பாதையை அமைக்க பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் ரூ.6,800 கோடியை ஒதுக்கியுள்ளது. கண்காணிப்பு கேமராக்களுடன் நவீன பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் ஸ்ரீநகரில் மையப் பகுதியில் உள்ள லால் சவுக் பகுதிக்கு பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சையத் அலி கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல் பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com