எல்லையில் அத்துமீறல்: இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

எல்லையில் இந்தியப் படைகள் அத்துமீறியதாக கூறி, இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லையில் இந்தியப் படைகள் அத்துமீறியதாக கூறி, இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள புக்லியான், காப்ரார், ஹர்பல், சார்வா, ஷகார்கர் ஆகிய பகுதிகளில் இந்தியப் படைகள் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன. 
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியப் படைகளின் அத்துமீறல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை நேரில் அழைத்து, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் கண்டனம் தெரிவித்தார். அப்போது, குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, இந்தியப் படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது மனிதாபிமானமற்றது என்றும், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியப் படைகள் செயல்படுவது, பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் நிகழாண்டு இதுவரை இந்தியப் படைகள் 1,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பொதுமக்கள் 28 பேர் உயிரிழந்ததுடன் 117 பேர் காயமடைந்தனர். கடந்த 2003-இல் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை, இந்தியா மதித்து நடக்க வேண்டும். அத்துமீறலில் ஈடுபட வேண்டாம் என்று தங்களது படையினருக்கு இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும். அதேபோல், காஷ்மீர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி, ஐ.நா. குழு தனது பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 4 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானும் அதேபோன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com