27 ஆண்டுகளாகியும் முடியாத ராஜீவ் கொலை வழக்கு விசாரணை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு, 27 ஆண்டுகளாகியும், அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
27 ஆண்டுகளாகியும் முடியாத ராஜீவ் கொலை வழக்கு விசாரணை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு, 27 ஆண்டுகளாகியும், அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு தனு நடத்தியத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ராஜீவுடன் மேலும் 14 பேரும் பலியாகினர்.
சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட முதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சதி குறித்து விசாரிப்பதற்கு சிபிஐ தலைமையில், ஐ.பி., ரா, வருவாய் புலனாய்வு அமைப்பு மற்றும் பிற விசாரணை அமைப்புகள் அடங்கிய பன்முக ஒழுங்கு கண்காணிப்பு குழு கடந்த 1998-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இந்த குழு, உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்த விசாரணை நிலவர அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது. அப்போது உச்ச நீதிமன்றம் கூறியதாவது:
மிகப்பெரிய சதி தொடர்பான விசாரணையை விரைவில் முடித்துக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், ராஜீய வழிகளில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?, யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது? என்பது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், கொழும்பு சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருப்பவருமான நிக்சன் என்ற சுரேனிடம் விசாரணை நடத்த அனுமதிகோரி, இலங்கைக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பான நிலவர அறிக்கையை 4 வாரங்களில் சிபிஐ தலைமையிலான பன்முக ஒழுங்கு கண்காணிப்பு குழு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவில் இடம்பெற்றிருந்த நிக்சன், தமிழகத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு நிலையத்தை நிறுவி செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலரை நிக்சன் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு உறுதி செய்தது. இதில் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாக தமிழக ஆளுநர் குறைத்தார். இதேபோல், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட எஞ்சிய 3 பேருக்கும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டில் குறைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com