ரஜினி காந்த் நேரில் வந்து கர்நாடக அணைகளை பார்வையிட வேண்டும்: குமாரசாமி அழைப்பு

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்ககோரும் முன் அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ரஜினி காந்த் நேரில் வரவேண்டும் என்று
ரஜினி காந்த் நேரில் வந்து கர்நாடக அணைகளை பார்வையிட வேண்டும்: குமாரசாமி அழைப்பு

பெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீர் திறக்ககோரும் முன் அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள ரஜினி காந்த் நேரில் வரவேண்டும் என்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக நாளை மறுநாள் புதன்கிழமை (மே 23) பொறுப்பேற்கவுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, தனது சகோதரர் எச்.டி.ரேவண்ணாவுடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று மாலை வழிபாடு நடத்தினார். 

நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை கர்நாடகாவுக்கு உள்ளது, புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஹசனில் உள்ள கோயில்களில் அவர் இன்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன்பாக, நடிகர் ரஜினி காந்த் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நிலைமையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்வார். 

அவ்வாறு கர்நாடகத்துக்கு ரஜினி காந்த் வருவாரானால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். அணைகளைப் பார்வையிட்ட பின்னும் தண்ணீர் திறந்துவிட ரஜினி காந்த் கோரினால் அதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் குமாரசாமி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com