கடன் மோசடியால் தினக் கூலிகளாக மாறிய கீதாஞ்சலி ஜெம்ஸ் ஊழியர்கள்: ஒரு குடும்பத்தின் கண்ணீர் கதை

வைரக் கற்களை வெட்டுவதில் நிபுணரான ஷாபனா பேகம் ஒரு மாற்றுத் திறனாளி. சில மாதங்களுக்கு முன்பு வரை இவரது மாதச் சம்பளம் ரூ.19 ஆயிரம்.
கடன் மோசடியால் தினக் கூலிகளாக மாறிய கீதாஞ்சலி ஜெம்ஸ் ஊழியர்கள்: ஒரு குடும்பத்தின் கண்ணீர் கதை

ஹைதராபாத்: வைரக் கற்களை வெட்டுவதில் நிபுணரான ஷாபனா பேகம் ஒரு மாற்றுத் திறனாளி. சில மாதங்களுக்கு முன்பு வரை இவரது மாதச் சம்பளம் ரூ.19 ஆயிரம். தன்னுடன் பணியாற்றும் சைதுலு என்பவரை ஷாபனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். சைதுலுவும் மாற்றுத் திறனாளி. இருவரும் தங்களது சிறிய குடும்பத்தை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு மிகப்பெரிய பணமுதலை, தான் வங்கியில் பெற்ற கோடிக்கணக்கான கடனை மோசடி செய்துவிட்டு தப்பியோடியதால், தங்களது கனவும், எதிர்காலமும் நொறுங்கிப் போகும் என்று அவர்கள் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.  ஆனால் அது நடந்துவிட்டது.

ஹைதராபாத்தில் இயங்கி வந்த கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்தான் ஷாபனா - சைதுலு தம்பதி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மெஹுல் சோக்ஸிதான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர். சோக்ஸியின் மீதான வழக்கினால், கீதாஞ்சலி நிறுவனம் மூடப்பட்டது. இதனால் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். 

இதனால் ஷாபனா - சைதுலு தம்பதியின் நிலை மோசமானது. கடந்த 3 மாதங்களாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. பி.எஃப். உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்குமா என்பதும் உறுதியில்லை. விரைவில் தங்கள் குடும்பத்தில் புதிய வரவை எதிர்நோக்கியிருந்த இந்த தம்பதிக்கு இது பேரிடியாக இருந்தது.

இருவரும் வேலையிழந்து வருவாய் இல்லாமல் தவித்ததால், கிடைக்கும் வேலையை செய்து வந்தார் சைதுலு. உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உதவியாளர் வேலை போன்றவற்றை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தனர். 

இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு, 9 மாத கர்ப்பிணியான ஷாபனா, பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மரணம் அடைந்தார். அவரோடு குழந்தையும் மரணித்தது.

ஆறுதல் அடையும் நிலையில் இல்லாத சைதுலு கூறுகையில், 8 ஆண்டு காலம் பிடித்த எங்களது பிஎஃப் தொகையை நிறுவனம் எங்களுக்கு அளித்திருந்தால் கூட, எனது மனைவிக்கு சிறந்த சிகிச்சையை அளித்து காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறி கதறுகிறார்.

கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெளிநாடுகளில் குடியேற, அவர்களது நிறுவனத்தில் பணியாற்றி வேலை இழந்த ஒரே ஒரு குடும்பத்தின் நிலை இது. வைரக் கற்களை வெட்டுவதில் நிபுணத்துவம் பெற்ற ஏராளமான ஊழியர்கள் தற்போது கூலித் தொழிலாளிகளாக மாறியுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.400 சம்பளத்துக்கு, கிடைக்கும் வேலையை செய்கிறார்கள். அதுவும் அதிர்ஷ்டம் இருந்து வேலை கிடைத்தால்.

கீதாஞ்சலி ஜெம்ஸில் பணியாற்றி வேலை இழந்த மற்றொரு மாற்றுத் திறனாளியான வசந்த் ராவ் கூறுகையில், சுமார் 10 கி.மீ. நடந்து சென்று துக்குகுடா பகுதியில் அதிகாலையிலேயே உட்கார்ந்திருப்போம். கட்டடப் பணிக்காகவோ, வேறு ஏதேனும் பணிக்காகவோ அழைத்துச் செல்லும் காண்டிராக்டர்கள் பணிக்குக் கூட்டிச் சென்றால் அன்று அதிர்ஷ்டம்தான் என்கிறார் எதிர்காலத்தைப் பற்றிய கவலையோடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com