நிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்: பினராயி விஜயன்

நிபா வைரஸ் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்: பினராயி விஜயன்

கேரளா மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்குள் நிபா எனும் புதிய வகை வைரஸ் கிருமி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த நோய் குறித்து கேரள முதல்வர் அரசு தரப்பு ட்விட்டர் பக்கத்தில் பினராயி விஜயன் சார்பில் பதிவிட்டுள்ளதாவது:

நிபா வைரஸ் தாக்கம் குறித்து கேரள அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதிலும், நோய் தாக்கம் பரவாமல் தடுப்பதிலும் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் பாதிப்பின் காரணமாக 4-ல் 3 பேர் உயிரிழப்பதாக தேசிய வைரஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் கடந்த 19-ஆம் தேதி நிபா பாதிப்பின் காரணமாக முதல் இறப்பு நேரிட்டுள்ளது. உடனடியாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் தொடர்புகொண்டு நிலவரங்களை கேட்டறிந்தது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுபோல அனைத்து இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக 24 மணிநேர சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரள அரசு கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் உயர்நிலை மருத்துவக்குழு இங்கு விரைந்துள்ளது.

முதலாவதாக கோழிக்கோட்டில் மட்டுமே இந்த நோயின் தாக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் இந்த சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிபா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com