அமைச்சர் பதவிகளுக்கு போட்டி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜிநாமா செய்துவிடுதாக மிரட்டல்!

2 தலை 4 கால்களுடன் எப்போதாவது அதிசயமாக குழந்தைகள் பிறக்கும். ஆனால், அதுபோன்ற குழந்தைகள் நீண்ட நாள்கள் உயிர்
அமைச்சர் பதவிகளுக்கு போட்டி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜிநாமா செய்துவிடுதாக மிரட்டல்!

கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜிநாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கும் மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி, பெங்களூரில் நாளை புதன்கிழமை (மே 23) மாலை 4.30 மணிக்கு பதவியேற்கவுள்ளார். அடுத்த நாளே வியாழக்கிழமை (மே 24) பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை தில்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியாவை சந்தித்து, கர்நாடக அமைச்சரவை இலாகாக்களை இறுதி செய்துள்ளார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி நிலையான ஆட்சி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமை குறித்தே நான் கவனம் கொண்டிருக்கிறேன்.
தற்போது எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, ஒரு தேர்வைப் போன்றதாகும். மக்களும், கடவுளும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்துவேன் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்க விரும்புகிறேன். மக்கள் மீது எனக்கிருக்கும் அக்கறையை எனது ஆட்சிமூலம் உறுதிபடுத்துவேன். மிகவும் மோசமான அரசியல் சூழ்நிலையின்போது நான் முதல்வராக இருக்கிறேன்.

அரசியல் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், 5 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை வழங்குவதில் எவ்வித தொந்தரவும் இருக்காது. இதை சாதிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. முதல்வர் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரு கட்சிகளின் கருத்துகளையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து, எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஆட்சி நடத்துவோம். பாஜக மூத்தத் தலைவர் ஸ்ரீராமுலு கூறுவது போல என் தூக்கத்தையோ, காங்கிரஸ் கட்சியின் தூக்கத்தையோ யாரும் கெடுக்க இயலாது. உண்மையில் பாஜகவினர் தான் தூக்கமிழந்துள்ளனர் என்றார் 

மேலும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

குமாரசாமி பதவியேற்பு விழாவுக்காக பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கேரளம், புதுச்சேரி, தில்லி ஆகிய 6 மாநில முதல்வர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி அளித்தால் ராஜிநாமா செய்யப்போவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான சிவானந்த பட்டீல், யஷ்வந்த் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதனை முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடனான சந்திப்பின் போது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போல், தங்கள் சமூகத்தினருக்கு 5 அமைச்சர் பதவியும் துணை முதல்வர் பதவியும் தராவிட்டால் ராஜிநாமா செய்யப்போவதாக, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சித்தராமையாவிடம் முறையீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே தம்மை பாஜகவினர் விலைக்கு வாங்குவது போல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட குதிரை பேர ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பூர் தமது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி முழுகும் படகு. அதனை நம்பி மஜத ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ஆட்சி இன்னும் 3 மாதங்களில் கவிழும். 2 தலை 4 கால்களுடன் எப்போதாவது அதிசயமாக குழந்தைகள் பிறக்கும். ஆனால், அதுபோன்ற குழந்தைகள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்ததில்லை. அதைப் போலத்தான் காங்கிரஸ், மஜத கூட்டணியும். கூட்டணி அரசு நீண்ட நாள்கள் நீடிக்காமல், கவிழப் போவதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com