நீரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் முறைகேடு செய்த நீரவ் மோடி மீது அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
நீரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் முறைகேடு செய்த நீரவ் மோடி மீது அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது முடக்கப்பட்ட ரூ.170 கோடி மதிப்பிலான சொத்தில் வங்கிக் கணக்கில் இருந்த பணம், அசையாத சொத்துகள், அவரது பங்கு முதலீடுகள் ஆகியவை அடங்கும். முன்னதாக, கடந்த வாரம் நீரவ் மோடியின் கீதாஞ்சலி குழுமத்தின் 34,000 நகைகளை அமலாக்கத் துறை கைப்பற்றியது. இதன் மதிப்பு ரூ.85 கோடியாகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று முறைகேடு செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்ட அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீரவ் மோடியின் தந்தை, சகோதரர், சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோருக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான ரூ.7000 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை இதுவரை முடக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com