கர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்பு

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்றார்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி, துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்பு

கர்நாடக முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநிலத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் துணை முதல்வராக பதவியேற்றார்.

பெங்களூரில் உள்ள விதான் சௌதாவில் இன்று மாலை 4.30 மணியளவில், குமாரசாமிக்கும், பரமேஸ்வருக்கும் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவையொட்டி விதான் செளதா அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் உள்பட 22 அமைச்சர் பதவிகளும், மஜதவுக்கு முதல்வர் பதவி உள்பட 12 அமைச்சர்கள் பதவிகளும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், மஜத சார்பில் கட்சிக்கு துணை சட்டப்பேரவைத் தலைவர் பதவியும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசின் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே, ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படும்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணி?: சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனினும், இந்தப் பதவியேற்பு விழா தேசிய அளவில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏனெனில், பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைவதற்கு இந்த நிகழ்ச்சி அச்சாரமாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com