குமாரசாமி தொகுதி கிராம மக்களுக்கு இலவச குக்கர், கேபிள் இணைப்பு !

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்க இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநில தலைவர் குமாரசாமி

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்க இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) மாநில தலைவர் குமாரசாமி தொகுதியில் உள்ள கிராம மக்களுக்கு அக்கட்சி நிர்வாகிகளால் இலவச குக்கர்கள் அளிக்கப்பட்டுள்ளன. 
இதேபோல், அனைத்து வீடுகளுக்கும் இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும் எனவும் மஜத நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியானது. எனவே, அந்த மாநிலத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 18ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு புதன்கிழமை மாலை பதவியேற்கவுள்ளது.
இந்நிலையில், குமாரசாமியின் தொகுதியான சன்னபட்னாவில் உள்ள குட்லூர் கிராமத்தில் மஜத உள்ளூர் நிர்வாகிகள், வீடு-வீடாக சென்று குக்கர் சாதனங்களை இலவசமாக அளித்துள்ளனர். இதுபோல், அக்கிராமத்தில் உள்ள 1,500 குடும்பத்தினருக்கு 5 லிட்டர் குக்கர் சாதனத்தை அவர்கள் வழங்கியுள்ளனர். பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகள் தவிர்த்து, கட்சி வேறுபாடு இல்லாமல் அக்கிராமத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குக்கர் சாதனங்களை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மஜத நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அதிகளவு குக்கர்களை எடுத்து வர முடியவில்லை. 18ஆம் தேதியன்று தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்காக காத்திருந்தோம். அதன்படி, தேர்தல் நடத்தை விதிகள் நீக்கப்பட்டதும், நாங்கள் குக்கர்களை எடுத்து வந்து விநியாகித்துள்ளோம்' என்றார்.
இதேபோல், அந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக கேபிள் இணைப்பு வழங்கப்படும் எனவும் மஜத நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, அக்கிராம மக்களுக்கு பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் போட்டியாக, அனைத்து வீடுகளுக்கும் குக்கர் அளிக்கப்படும் என மஜத உள்ளூர் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
இதற்கான கூப்பன்களை தேர்தலின்போது அளித்துள்ளனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமலில் இருந்ததால், அதை அவர்களால் அப்போது வழங்க முடியவில்லை. எனவே தற்போது அதை அளித்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com