கூட்டணி ஆட்சி சவாலானது: குமாரசாமி

கர்நாடகத்தில் அமையவிருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்வது மிகப்பெரிய சவால்தான் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா நகரில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்த முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி. 
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா நகரில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்த முதல்வராக பதவியேற்கவுள்ள குமாரசாமி. 

கர்நாடகத்தில் அமையவிருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை 5 ஆண்டுகளுக்கு நீடிக்கச் செய்வது மிகப்பெரிய சவால்தான் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
குமாரசாமி தலைமையில் இந்தக் கூட்டணி ஆட்சி புதன்கிழமை (இன்று) பொறுப்பேற்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருகேரி மடத்திற்கு செய்தியாளர்களிடம் சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து குமாரசாமி செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:
எனது வாழ்க்கையில் இது மிகப் பெரிய சவால். ஒரு முதல்வராக எனது பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றிவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை.
எங்களது கூட்டணி அரசு சுமுகமாக செயல்படுமா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்லாது கர்நாடக மக்களுக்கும் உள்ளது. ஆனாலும், அன்னை சாரதாம்பாள், ஜகத்குரு சங்கராச்சாரியார் ஆகியோரது ஆசி கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் குமாரசாமி.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பது உறுதியானது முதல் பல்வேறு கோயில்களுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தி வருகிறார்.
பெங்களூரு அருகேயுள்ள சிருகேரியில் உள்ள சாரதாம்பாள் கோயிலிலும், தட்சிணாம்யை கோயிலிலும் அவர் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
பின்னர், தர்மஸ்தாலவில் உள்ள பிரசித்தி பெற்ற மஞ்சுநாதசுவாமி கோயிலுக்கு சென்று குமாரசாமி வழிபட்டார்.
கர்நாடகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் குமாரசாமியுடன் சேர்த்து சில அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக விழா அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, குமாரசாமி மட்டுமே புதன்கிழமை பதவியேற்பார் என்றும், அவர் மீது சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்த பிறகே பிற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று செய்திகள் வலம் வந்தன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல்வேறு தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com