நாட்டில் அசாதாரண அரசியல் சூழல்: தில்லி பேராயரின் கருத்தால் சர்ச்சை

நாட்டில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுவதாக தில்லி பேராயர் கூறியிருந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அசாதாரண அரசியல் சூழல் நிலவுவதாக தில்லி பேராயர் கூறியிருந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கே.ஜே.அல்போன்ஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், வலதுசாரி இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பேராயரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், தமது கருத்துக்கள், பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றியது அல்ல என்று பேராயர் விளக்கம் அளித்துள்ளார்.
தில்லி பேராயராக இருப்பவர் அனில் கோட்டோ. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்த சில தினங்களுக்கு முன், அனைத்து பாதிரியார்களுக்கும் அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும் பேராயர் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தின் விவரம்:
""நாம் தற்போது அசாதாரண அரசியல் சூழலிலை எதிர்கொண்டுள்ளோம். இதனால், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக விதிகளுக்கும், தேசத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்காகவும், அரசியல் தலைவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வது நமது வழக்கம்தான். ஆனால், பொதுத்தேர்தல் வரும்போது பிரார்த்தனை சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது.
2019- இல் தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். அப்போது புதிய அரசு அமையவிருக்கிறது. அதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். தேசத்துக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்துவதுடன் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஓராண்டுக்கு விரதம் இருக்க வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மத்திய அமைச்சர்கள் கருத்து: பேராயரின் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தில்லியில், நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜாதி, மத அடிப்படையில் நாட்டில் பாகுபாடு காட்டப்படுவது கிடையாது என்றார். 
மற்றொரு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், பாகுபடற்ற வளர்ச்சியை நோக்கியே பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
மத்திய அமைச்சர் அல்போன்ஸ் இது தொடர்பாக பேசுகையில், சாமியார்கள் (பேராயர்கள்) அரசியல் களத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். 
பேராயருக்கு ஆதரவு: பேராயரின் கருத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமித் ஷா கண்டனம்: பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்று யாராவது பேசினால், எங்களுக்கு எதிரான கட்சிகள் அதற்கு ஆதரவு அளிப்பது வாடிக்கையாகிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com