மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.321 கோடி

கடந்த 2016-17 நிதியாண்டில் 32 மாநிலக் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.321 கோடியாக உள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி கட்சி ரூ.82.76 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2016-17 நிதியாண்டில் 32 மாநிலக் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.321 கோடியாக உள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி கட்சி ரூ.82.76 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தை ஆளும் அதிமுக, ரூ.48.88 கோடியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. வரவைக் காட்டிலும் கூடுதலாக செலவழித்த கட்சிகளின் பட்டியலில் அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிரதான கட்சிகளான ஆம் ஆத்மி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போன்ற கட்சிகள் தங்களது வரவு-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் எண்ணிக்கை 48 ஆகும். இந்தக் கட்சிகள் தங்களது வரவு-செலவு கணக்கு விவரங்களையும், வருமான வரி தொடர்பான விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி, 2016-17 நிதியாண்டை பொறுத்தவரையில் ஆம் ஆத்மி, ஆர்ஜேடி உள்ளிட்ட 16 கட்சிகள் தங்களது கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை. அவை தவிர்த்த 32 கட்சிகள் தங்களது செலவுக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளன. இதிலும்கூட சில கட்சிகள், 2 வாரம் முதல் 5 மாதங்கள் கால தாமதமாகவே கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளன.
இவ்வாறு கட்சிகள் தாக்கல் செய்த கணக்கு விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன.
2016-17 நிதியாண்டில் சமாஜவாதி கட்சி ரூ.82.76 கோடியும், ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ரூ.72.92 கோடியும், அதிமுக ரூ.48.88 கோடி நிதியையும் வருமானமாக பெற்றுள்ளன.
பெரும்பாலும் நன்கொடை, அன்பளிப்பு, பங்களிப்பு, வங்கிகள் அளித்த வட்டி போன்றவையே கட்சிகளின் வருமானமாக இருக்கிறது.
சமாஜவாதி கட்சி மிக அதிக பட்சமாக ரூ.147.1 கோடியை செலவு செய்துள்ளது. இது வரவைக் காட்டிலும் கூடுதலாகும். இதேபோல் அதிமுக ரூ.86.77 கோடியும், திமுக ரூ.85.66 கோடியும் செலவு செய்துள்ளன. தேர்தல் செலவினங்கள், நிர்வாக செலவுகளுக்காக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டுகளைக் காட்டிலும் வருவாய் குறைந்துள்ளதாக 14 கட்சிகளும், வருவாய் அதிகரித்துள்ளதாக 13 கட்சிகளும் தெரிவித்துள்ளன.
சுவாரஸ்ய தகவல் என்னவெனில், ஓவைஸி தலைமையிலான ஏஐஎம்ஐஎம், கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கவிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் தங்களது வருமானத்தில் 87 சதவீத பணம் செலவிடப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com