அமர்நாத் யாத்திரையும், அசம்பாவித வரலாறும்: காஷ்மீர் அதிகாரிகளுடன் ஆளுநர் தீவிர ஆலோசனை  

ஜூன் 28-ஆம் தேதி தொடங்க இருக்கும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் வோஹ்ரா புதன்கிழமை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார்.
அமர்நாத் யாத்திரையும், அசம்பாவித வரலாறும்: காஷ்மீர் அதிகாரிகளுடன் ஆளுநர் தீவிர ஆலோசனை  

அமர்நாத் குகைகோயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் சென்று தரிசித்து வருவது வழக்கம். மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 48 நாட்களுக்குள் இந்த கோயிலுக்கு சென்று தரிசிக்கலாம். ஆனால், இந்த கோயிலுக்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 

இந்த கோயிலுக்கு செல்ல முன்னதாகவே முறையான அனுமதியை பெறவேண்டும். 

முதலில் பயங்கராவாத அச்சுறுத்தல் காரணமாக 1991 முதல் 1995 வரை அமர்நாத் யாத்திரையை இந்திய அரசு தடை செய்தது. அதன்பிறகு பயங்கரவாதிகளின் வாக்குறுதியை ஏற்று 1996-ஆம் ஆண்டு இந்திய அரசு தடையை தகர்த்தி அனுமதி வழங்கியது. ஆனால், அந்த ஆண்டு மோசமான வானிலை காரணமாக யாத்திரை மேற்கொண்டவர்கள் சிலர் கடும் குளிரில் உயிரிழந்தனர். 

அதன்பிறகு 2000, 2001, 2002 ஆகிய 3 ஆண்டுகளில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 2000-ஆம் ஆண்டு 32 பேர் வரை கொல்லப்பட்டனர். 2001-ஆம் 13 பேர் வரை கொல்லப்பட்டனர். 2002-ஆம் ஆண்டு 9 பேர் கொல்லப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, 5 பேர் உயிரிழந்தனர். இது போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கையை அரசு உடனடியாக குறைத்துவிடும். 

அதன்பிறகு மீண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் நேராமல் இந்த யாத்திரை நடைபெற்று வந்தது. 

கடைசியாக கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 8 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

இதே சமயத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட வேறு ஒரு தாக்குதலில் அந்த பேருந்து ஓட்டுநர் சலீம் துரிதமான செயல்பாட்டு பயணிகளை காப்பாற்றினார். இதனால், அந்த தாக்குதலில் இருந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதுமட்டுமின்றி, அங்கு செல்லக்கூடிய வழித்தடம் ஆனது மிகவும் அபாயகரமான பாதையாகும். அதனால், அவ்வப்போது சாலை விபத்துகளாலும், நிலச்சரிவாலும் விபத்துகள் நேர்ந்துள்ளன. 

இதுபோன்ற இயற்கை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால் இந்த முறை இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க ஜம்மு-காஷ்மீர் அரசு தீவிரமாக உள்ளது. 

நடப்பாண்டுக்கான யாத்திரை ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு குறித்து அம்மாநில ஆளுநர் உயர்மட்ட கூட்டம் ஒன்றை நேற்று (புதன்கிழமை) நடத்தினார்.         

அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைவரும் ஆளுநருமான என்.என். வோஹ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயல் அதிகாரி, உள் துறை செயலர். காவல் துறை இயக்குநர், மாநில மற்றும் மத்திய உளவுத் துறையின் தலைவர்கள், ஜிஓசி கார்ப்ஸ், ஜிஓசி விக்டர் படை, மத்திய ஆயுதப் படை உயர் அதிகாரிகள், காஷ்மீரின் காவல் ஆய்வாளர், அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை மற்றும் கூடுதல் தலைமை செயல் அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர். 

இதில், நடப்பாண்டின் யாத்திரையின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதால் அனைத்து ஏஜென்சிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஜம்மு முதல் ஸ்ரீநகர்,  ஸ்ரீநகர் முதல் பால்டால் மற்றும் அனந்தாக் முதல் பஹால்கம் வரை பக்தர்கள் பயணம் அமைதியாக நடைபெற சாலை சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் படை, மீட்புப் படை, பல்வேறு வழியில் இருக்கும் பாதுக்காப்பு படை, யாத்திரை முகாம்களில் உள்ள கட்டுப்பாட்டு அறை யாத்தீரிகளின் ஸ்கேன் கருவிகள் என அனைத்து துறையின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com