கர்நாடக முதல்வராக 2ஆவது முறையாக பதவியேற்ற குமாரசாமி

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்பது இது 2ஆவது முறையாகும்.
பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின்  கர்நாடக மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வருக்கு துணை முதல்வராக  பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வஜுபாய் வாலா.
பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் கட்சியின்  கர்நாடக மாநிலத் தலைவர் ஜி. பரமேஸ்வருக்கு துணை முதல்வராக  பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் வஜுபாய் வாலா.

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்பது இது 2ஆவது முறையாகும்.
கர்நாடக முதல்வராக புதன்கிழமை பதவியேற்ற குமாரசாமி (58), முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெ கௌடாவின் 3-ஆவது மகன் ஆவார். ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர். கனகபுரா மக்களவைத் தொகுதிக்கு கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முதலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அரசியலுக்குள் அவர் வந்தார். கடந்த 2004ஆம் ஆண்டில் எம்எல்ஏவாக முதன்முதலில் குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸின் தரம் சிங் அரசுக்கு மஜத ஆதரவு அளித்தது. எனினும், காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை கடந்த 2006ஆம் ஆண்டு குமாரசாமி வாபஸ் பெற்றார். அவருக்கு மஜதவின் 42 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து குமாரசாமி ஆட்சியமைத்தார். இதன்படி, மஜதவும், பாஜகவும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தன. முதலில் குமாரசாமி 20 மாதங்கள் முதல்வராக இருந்தார். இதன்பின்னர், பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். எனினும், 7 நாள்களில் எடியூரப்பா அரசுக்கான ஆதரவை குமாரசாமி வாபஸ் பெற்றார். இதன்பின்னர், கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, முதன்முதலில் ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில் மஜத பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
தற்போது மீண்டும் 2ஆவது முறையாக, காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி ஆட்சியமைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பு "நான் கிங் மேக்கர் அல்ல; கிங்' என்று குமாரசாமி தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும், காங்கிரஸ் ஆதரவை பெற்று, மாநில முதல்வராகியுள்ளார்.
பரமேஸ்வர் வாழ்க்கை வரலாறு: துணை முதல்வராக பதவியேற்றுள்ள ஜி. பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸில் தலித் சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். அவர், ஆஸ்திரேலியாவின் அடிலைடு பல்கலைக்கழகத்தில் உடலியல் (பிசியாலஜி) குறித்த ஆராய்ச்சி படிப்பு படித்துள்ளார். 
கடந்த 1989ஆம் ஆண்டில் பரமேஸ்வரை அரசியலுக்கு அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி அழைத்து வந்தார். 5 முறை எம்எல்ஏவாக பரமேஸ்வர் இருந்துள்ளார். பலமுறை அமைச்சர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com