நான் பிரதமரா? சந்திரபாபு நாயுடு மறுப்பு

நான் பிரதமரா? சந்திரபாபு நாயுடு மறுப்பு

நாட்டின் பிரதமர் ஆகும் கனவு எனக்கு இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் வருடாந்திர மாநாடு நேற்று (வியாழக்கிழமை) அக்கட்சியின் தெலங்கானா பிரிவு சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது, 

"ஹைதராபாத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. உங்களது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்கிறேன். வரும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

புல்லட் ரயிலுக்கான நிதி மும்பை மற்றும் தில்லிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கும், ஆந்திராவுக்கும் எதுவும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நான் ஆதரித்தேன். ஆனால், தற்போது ஏடிஎம் மையங்களில் பணத்தை பார்க்க முடியவில்லை, நமது பணத்தை நம்மால் செலவிட முடியவில்லை. முத்தலாக் குறித்து நாடாளுமன்றத்தில் நான் மட்டும் தான் குரல் எழுப்பினேன். 

நாம் 4 ஆண்டுகள் காத்திருந்தோம். ஆனால், எந்த ஆதரவும் இதுவரை அவர்களிடம் (பாஜக) இருந்து கிடைக்கவில்லை. அதனால், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தேன். 

கர்நாடக தேர்தலில் நடைபெற்றது தான் தெலங்கானாவிலும் நடைபெறும். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்றன."    

இந்த வருடாந்திர மாநாட்டில் தெலுங்கு தேச கட்சியின் தெலங்கானா மாநில தலைவர் ரமணா ராவ், கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ணய்யா மற்றும் பல தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தின் போது தெலுங்கு தேச கட்சியின் ஆதரவாளர்கள் சந்திரபாபு நாயுடு தான் அடுத்த பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். ஆனால், எனக்கு பிரதமராக வேண்டும் என்ற கனவு இல்லை என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

கடந்த சில நாட்களாக 2019 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க மாநில கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதற்கு அடித்தளம் அமைக்க கடந்த புதன்கிழமை கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி தனது பதவியேற்பு விழாவுக்கு பல மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அந்த அழைப்பை ஏற்று பாஜவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் பலத்தை நிரூபிக்க பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, பல தலைவர்கள் தனித்தனியே பேசினர். 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அடித்தள விதை குமாரசாமியின் இந்த பதவியேற்பு விழாவில் தூவப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கோஷம் நேற்று எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com