கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)}காங்கிரஸ் கூட்டணி அரசு மீது வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத)}காங்கிரஸ் கூட்டணி அரசு மீது வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி, எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை 5 நட்சத்திர ஹோட்டல்களில் மஜதவும், காங்கிரஸýம் தங்க வைத்துள்ளன.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை பலம் எந்த அரசியல் கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாஜக அதிக இடங்களில் வென்றதால், சட்டப் பேரவை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பாவை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக தனது பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்தார்.
இதன்பின்னர், மஜத}காங்கிரஸ் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கர்நாடக முதல்வராக குமாரசாமி புதன்கிழமை மாலை பதவியேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் ஜி. பரமேஸ்வர் பதவியேற்றார்.
சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் அவகாசம் அளித்திருந்தார். எனினும், தனக்கு 15 நாள் அவகாசம் தேவையில்லை; கூடிய விரைவில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் என்று குமாரசாமி குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய அரசு மீது 25ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பகல் 12.15 மணிக்கு இடைக்கால பேரவைத் தலைவர் கே.ஜி.போப்பையா தலைமையில் கூடவிருக்கிறது. இக் கூட்டத்தில், முதலாவதாக பேரவைத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத் தேர்தலில் மஜத}காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ரமேஷ்குமார், பாஜக வேட்பாளராக சுரேஷ்குமார் களத்தில் உள்ளனர்.
குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவைத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. புதிய பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுக் கொண்டதும், மஜத}காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தை குமாரசாமி கொண்டுவருகிறார். அதன்மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள். முடிவில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சட்டப் பேரவையில் மஜத}காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி, தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசலாம் என்று மஜதவும், காங்கிரஸýம் சந்தேகிக்கின்றன. இதனால், அந்த 2 கட்சிகளும், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஹோட்டல்களில் கடந்த 9 நாள்களாக பாதுகாப்பாக தங்க வைத்துள்ளன.
ஹோட்டல்களில் எம்எல்ஏக்கள் அடைத்து வைப்பு?: தும்லூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும், பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டலில் மஜத எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசுவதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை.
இதனிடையே, ஹோட்டல்களில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு செல்லிடப் பேசியை பயன்படுத்த 2 கட்சிகளும் தடை விதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்நலம் சரியில்லாத சில எம்எல்ஏக்கள், தங்கள் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாகவும், அதை இரு கட்சிகளும் நிராகரித்து விட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
குற்றச்சாட்டுகளை நிராகரித்த காங்கிரஸ், மஜத: எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மஜதவும், காங்கிரஸýம் மறுத்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரையில், எம்எல்ஏக்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பர். அதன்பின்னர் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது தவறு. மிகவும் ஆடம்பரமான ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செல்லிடப் பேசி பறிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. அவர்கள் செல்லிடப் பேசி மூலம், குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய அரசு தோற்க வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்' என்றார்.
கட்சிகளின் பலம் என்ன?: கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே மே 12}ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி, சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர். 
காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்கள், மஜதவுக்கு 37உறுப்பினர்கள், பகுஜன்சமாஜ் கட்சி, கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதாகட்சி, சுயேச்சைக்கு தலா ஓர் உறுப்பினர்கள் உள்ளனர். அதன்படி, ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத}காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com