தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கூடுதல் தகவல்களுடன் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் கலவரம் மேலும் பரவாமல் இருக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சுட்டுரை (டுவிட்டர்) வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மனித உயிர்கள் இழப்பால் மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்த சம்பவத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அங்கு நிலவும் சூழல் குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிக்கிறது. 
இந்நிலையில், மேலும் கூடுதல் தகவல்களுடன் அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. என் சிந்தனை முழுவதும் இறந்தவர்களின் குடும்பத்தினர் பற்றியே உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அப்பகுதியில் தொடர்ந்து அமைதி காக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் அறிக்கை கோருகிறது மத்திய அரசு: துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அங்கு நிலவும் சூழல் குறித்து விசாரித்து வருகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலைநாட்டவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com