நீரவ் மோடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நீரவ் மோடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடன் ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் சமர்ப்பித்தனர்.
சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது, கடன் மோசடி செய்தது எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அதில் நீரவ் மோடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.13,000 கோடிக்கும் மேல் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸியும் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவர்கள் லண்டனில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இதனிடையே, அவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, இதுவரை 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சுமார், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கெனவே சிபிஐ சார்பில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அமலாக்கத் துறையும் தனது குற்றப்பத்திரிகையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. நீரவ் மோடியின் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன.
அடுத்த சில நாள்களில் மெஹுல் சோக்ஸிக்கு எதிரான குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பிக்க உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிபிஐ அதிகாரி மாற்றம்: இதனிடையே, நீரவ் மோடி வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இணை இயக்குநர் ராஜீவ் சிங், அவரது சொந்த மாநிலமான திரிபுராவுக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தவிர வேறு மூன்று அதிகாரிகளும் சொந்த மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீûஸ (தேடப்படும் நபர்கள்) பிறப்பிப்பதற்காக சர்வதேச போலீஸாரின் (இன்டர்போல்) உதவியை நாட சிபிஐ திட்டமிட்டது. அத்தகைய நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த போலீஸார் அவர்களைக் கைது செய்ய முடியும். மாறாக, அவர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சிபிஐ அதிகாரிகள் நேரடியாகச் சென்று கைது செய்ய வேண்டிய அவசியம் எழாது.
இதன் காரணமாகவே, சிபிஐ அதிகாரிகள் அவர்களது சொந்த மாநிலப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com