பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியர் கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு தகவல்களை அளித்து வந்ததாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்தியர் கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு தகவல்களை அளித்து வந்ததாக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங் கன்யால் (படம்) என்ற அந்த நபர், கடந்த 2015-2017 வரை இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றியவர். அவரிடம் இருந்த பாகிஸ்தான் தயாரிப்பு செல்லிடப்பேசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு காவல்துறை சார்பில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பணியாற்றியபோதும், அங்கிருந்து நாடு திரும்பிய பின்னரும் ஐஎஸ்ஐ அமைப்புக்காக ரமேஷ் சிங் கன்யால் உளவு பார்த்து வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் ரமேஷ் சிங் கன்யால் பணியாற்றியபோது, ஐஎஸ்ஐ அமைப்பு அவரை தங்களின் உளவு தகவலுக்கான முகவராக பணிக்கு சேர்த்துள்ளது.
இஸ்லாமாபாதில் தூதரக அதிகாரியின் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அவரது செல்லிடப்பேசி, மடிக்கணினியில் இருந்தும் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. தூதரகத்துக்கு வரும் துப்புரவு பணியாளர்கள் மூலம் கன்யாலிடம் ஐஎஸ்ஐ தொடர்பில் இருந்திருக்கிறது.
பணத்துக்கு ஆசைப்பட்டு நம்பிக்கைகுரிய தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பிடம் ரமேஷ் சிங் கன்யால் பகிர்ந்து வந்துள்ளார். இதற்காக டாலர் மதிப்பில் அவருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள்களில் இந்தியா வரும்போது தில்லியில் அந்த டாலர்களை ரூபாயாக மாற்றி வீட்டுக்கு எடுத்துச் செல்வதை அவர் வழக்கமாகக் வைத்திருந்தார்.
வங்கிகளிடம் இருந்தும், உள்ளூர் கிராம மக்களிடமும் ஏராளமாக கடன் வாங்கியிருந்ததால், அந்தக் கடனை அடைப்பதற்காக ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்க்க ரமேஷ் சிங் கன்யால் ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் பணி முடிந்து நாடு திரும்பிய பிறகும்கூட, தங்களுக்காக உளவு பார்க்கும்படி ரமேஷ் சிங் கன்யாலிடம் ஐஎஸ்ஐ அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. அவர்களை தொடர்பு கொள்வதற்காக கன்யாலுக்கு பாகிஸ்தான் தயாரிப்பிலான செல்லிடப்பேசியும் வழங்கப்பட்டுள்ளது. அந்த செல்லிடப்பேசியை தற்போது நாங்கள் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணுவ மையங்கள் குறித்து தகவல் சேகரிக்குமாறு கன்யாலிடம் ஐஎஸ்ஐ அமைப்பு கேட்டுக் கொண்டது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரமேஷ் சிங் கன்யாலை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் என்னென்ன தகவல்களை பகிர்ந்து கொண்டார்? அதற்காக எவ்வளவு பணம் பெற்றார்? என்பதெல்லாம் விசாரணையில் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com