பெட்ரோல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு: மோடிக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் சவால்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த உடல் தகுதி சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு சவால்களை
பெட்ரோல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு: மோடிக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் சவால்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த உடல் தகுதி சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு சவால்களை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாள்தோறும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்க முடியுமா? என்று மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
முன்னதாக, கேப்டன் விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் விடியோ ஒன்றை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், இதுபோன்ற உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்; இந்தச் சவாலை பிரதமர் மோடி, மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஏற்க வேண்டும் என்று புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக, பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை காலை பதிலளித்தார். இதுதொடர்பான விடியோவை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் மோடி, நான் விடுக்கும் சவால்களை ஏற்பாரா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை பிரதமர் மோடி குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். பிரதமரிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் என்று ராகுல் காந்தி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவும் பிரதமர் மோடிக்கு சில சவால்கள விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து 11-ஆவது நாளாக, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி மெளனமாக உள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மத்திய கலால் வரி மூலமாக ரூ.10 லட்சம் கோடி வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயணத்தைப் பயன்படுத்தி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைப்பதற்கு பிரதமர் உதவுவாரா? 
ஏற்கெனவே உறுதியளித்தபடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பாரா? விவசாயிகளின் விளைபொருள்களுக்கு பிரதமர் உரிய விலை கொடுப்பாரா? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.80 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவாரா? பாகிஸ்தானின் பயங்கரவாதம், சீனாவின் அத்துமீறல் ஆகியவற்றை தடுத்து நிறுத்துவாரா?
பிரதமர் மோடி ஊடகங்களுக்கு காட்சியளிப்பதை கைவிட்டு நிர்வாக சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு, இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.15-20 லட்சம் செலுத்த மோடி உறுதியளிப்பாரா? என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் சவால் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மோடி மெளனம் கலைப்பாரா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, அக்கட்சியைச் சேர்ந்த சசி தரூர் ஆகியோரும் சவால் விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது பட்டப் படிப்புச் சான்றிதழ் நகல்களை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிடுவாரா? என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர் சஞ்சய் ஜா சவால் விடுத்துள்ளார். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாரம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் மோடிக்கு சவால் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com