2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்தால், அது பாஜகவுக்கு சவாலாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கட்சியின் தலைவர் அமித் ஷா, தில்லியில் பத்திரிகையாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுடன் இணைந்தே மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று மகராஷ்டிரத்திலும் சிவசேனயுடனான கூட்டணியைத் தொடரவே விரும்புகிறோம். கூட்டணியை விட்டு அக்கட்சியை வெளியேற்றும் எண்ணம் ஒருபோதும் இல்லை.
அதேநேரத்தில் சிவசேனை தனித்துப் போட்டியிட விரும்பி, கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதை எங்களால் தடுக்க இயலாது. அது, அக்கட்சியின் விருப்பம். எத்தகைய சூழ்நிலையையும்
எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது.
இப்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஓரணியாக திரள முடிவு செய்துள்ளன. ஏனென்றால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அக்கட்சிகள் அனைத்தும் 
உணர்ந்துள்ளன. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போதும் இதுபோன்ற வியூகம் வகுக்கப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு மக்கள் அளித்த அமோக ஆதரவுக்கு முன்னால் எதிர்க்கட்சிகளின் உத்தி எடுபடவில்லை. மாநில அளவில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளதை மறுக்க இயலாது. ஆனால், அதை வைத்துக் கொண்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்தி விடலாம் என நினைப்பது நடக்காத காரியம்.
பகுஜன் - சமாஜவாதி கூட்டணி சவாலானது: மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் என்பது உண்மை. அதேவேளையில், ரேபரேலியோ அல்லது அமேதியோ காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடிக்கும் என்பதும் திண்ணம். 
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த 80 தொகுதிகளில் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். இம்முறை அந்தத் தொகுதிகளை நிச்சயம் கைப்பற்றுவோம். தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அத்தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். 
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார் அமித் ஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com