இந்தியாவும், வங்கதேசமும் கருத்தொற்றுமையால் இணைந்துள்ளன: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவும், வங்கதேசமும் இருவேறு நாடுகளாக உள்ள போதிலும், கற்றுத்தொற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இணைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.
மேற்கு வங்க மாநிலம், விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.

இந்தியாவும், வங்கதேசமும் இருவேறு நாடுகளாக உள்ள போதிலும், கற்றுத்தொற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இணைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி மத்திய பல்கலைக்கழகத்தின் 49ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது மோடி இவ்வாறு கூறினார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில், இந்தியவங்கதேச கலாசார உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் வங்கதேச அரசால் கட்டப்பட்டுள்ள வங்கதேச இல்லத்தையும் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
இந்தியாவும், வங்கதேசமும் கருத்தொற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இணைந்துள்ளன. கலாசாரம் என்றாலும், பொது கொள்கை என்றாலும் இரு நாடுகளின் மக்களும் பரஸ்பரம் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்கின்றனர். அதற்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்றுதான் வங்கதேச இல்லம்.
நான் இங்கு மேடைக்கு வந்தபோது, ரவீந்திரநாத் தாகூரின் மண்ணில் கால் வைக்கப் போகிறோம் என்பதை எண்ணி சிலிர்ப்படைந்தேன். 
இங்கு ஏதோ ஒரு இடத்தில் இருந்துதான் தனது எழுத்துக்களை, பாடல்களை ரவீந்திரநாத் தாகூர் எழுதியிருக்கிறார். மகாத்மா காந்தியுடன் இணைந்து சொற்பொழிவு ஆற்றியதும், மாணவர்களை வழிநடத்தியதும் இங்கிருந்துதான்.
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் உதவியால் இங்குள்ள 50 கிராமங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. 
இதே பல்கலைக்கழகம் 2021ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழாவை எட்டும்போது மேலும் 50 கிராமங்களை வளர்ச்சியடையச் செய்திருக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். 
மின்சார வசதி, எரிவாயு வசதி மற்றும் இணைய பரிவர்த்தனை சேவைகள் போன்ற வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவுரை: 2022ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று 125 கோடி மக்களும் உறுதி பூண்டுள்ளனர்.
கல்வியின் மூலமாகவே இந்த கனவை நனவாக்க முடியும். அந்த வகையில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக, புதிய பாதையில் தங்களது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
உங்களுடன் யாரும் வராவிட்டாலும், இலக்கை நோக்கி தனியே நடந்து செல்லுங்கள். வளர்ச்சியை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்து வைத்தால், அடுத்த நான்கு அடிகளை அரசு எடுத்து வைக்கும் என்றார் மோடி.
முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் பனகார் என்னும் இடத்தில் பிரதமர் மோடி வந்திறங்கினார். மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
மன்னிப்பு கோரிய மோடி
விஸ்வ பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடிநீர் வசதி போதுமான அளவில் செய்து தரப்படவில்லை என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், ''நான் இங்கு வந்தபோது, மாணவர்கள் சிலர் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என சைகை காட்டினர். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் இதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
இந்தியாவுக்கு நன்றி: ஹசீனா
வங்கதேசத்துக்கு இந்தியா அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நல்கி வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
1971இல் வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருந்ததை என்றென்றும் மறக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். இதுதொடர்பாக, பட்டமளிப்பு விழாவில் ஷேக் ஹசீனா மேலும் பேசியதாவது:
இந்தியாவிடம் இருந்து அனைத்து விதமான ஒத்துழைப்பையும் நாங்கள் பெற்று வருகிறோம். வறுமை ஒன்றுதான் எங்களது எதிரி. அதை ஒழிக்க விரும்புகிறோம். அந்த இலக்கை அடைவதில் இந்தியா எங்களுக்கு உதவி வருகிறது.
அத்துடன் இரு தரப்பு பிரச்னைகள் பலவற்றுக்கு நாம் சுமூகமான முறையில் தீர்வு கண்டுள்ளோம். இதனால், இரு நாடுகளுக்கும் பலன் ஏற்பட்டது. அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையே சில தீர்க்கப்படாத பிரச்னைகள் உண்டு என்ற போதிலும் அவற்றை இந்த நிகழ்வில் குறிப்பிட விரும்பவில்லை. நில எல்லை பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் மூலமாக எல்லைப் பிரச்னைக்கு இருநாடுகளும் தீர்வு கண்டன என்றார் ஹசீனா.
இந்திய பிராந்தியத்தில் இருந்த வங்கதேச பகுதிகளை நம் வசம் எடுத்துக் கொண்டு, வங்கதேச பிராந்தியத்தில் இருந்த இந்திய பகுதிகளை அந்நாட்டிடம் ஒப்படைக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com