கர்நாடக பேரவைத் தலைவராக காங்கிரஸின் ரமேஷ் குமார் ஒருமனதாகத் தேர்வு

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ் குமார் ஒருமனதாக வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட இருந்த

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ் குமார் ஒருமனதாக வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட இருந்த பாஜக வேட்பாளர் எஸ்.சுரேஷ் குமார் பின்வாங்கியதை அடுத்து ரமேஷ் குமார் போட்டியின்றித் தேர்வானார்.
கர்நாடக பேரவையில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அப்போது, கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தனது வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இதையடுத்து, பேரவையின் இடைக்காலத் தலைவர் கே.ஜி.போபைய்யா தலைமையில் அவை கூடியபோது, பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜகவின் சுரேஷ் குமாரை முன்மொழியும் தீர்மானத்தை தாம் கொண்டுவரவில்லை என்று அக்கட்சியின் சுனில் குமார் கூறினார். இதனை சுரேஷ் குமாரும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பேரவைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் குமார் பெயரை, முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் பேரவை கட்சித் தலைவருமான சித்தராமையா முன்மொழிந்தார். துணை முதல்வரான ஜி. பரமேஷ்வர் அதனை வழிமொழிந்தார். இதையடுத்து ரமேஷ் குமாரை பேரவைத் தலைவராக நியமிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
ரமேஷ் குமாரை பேரவைத் தலைவர் இருக்கைக்கு, முதல்வர் குமாரசாமியும், பாஜக தலைவர் எடியூரப்பாவும் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, போட்டியிலிருந்து விலகுவது குறித்து சுரேஷ் குமார் தனது சுட்டுரையில், 'கட்சி அறிவுறுத்தலின் பேரிலேயே கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கான போட்டிக்கு வேட்புமனு தாக்கல் செய்தேன். எனினும், நாடாளுமன்ற பாரம்பரியத்தின்படி, பேரவைத் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கட்சியின் கலந்தாலோசனையில் எழுந்தது. இதையடுத்து எனது வேட்புமனுவை திரும்பப் பெற்றேன்' என்று பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com