நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி: பாஜக வெளிநடப்பு

கர்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாகமாக கையசைக்கும் முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாகமாக கையசைக்கும் முதல்வர் குமாரசாமி மற்றும் மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர்.

xகர்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு வெற்றி பெற்றது. மக்கள் தங்களுக்கு தனிப்பெரும்பான்மையை அளிக்காவிட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களது நலனுக்காக உழைப்போம் என்று அப்போது குமாரசாமி தெரிவித்தார்.
இதனிடையே, வாக்கெடுப்பைப் புறக்கணித்துவிட்டு பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசு நீண்ட நாள்கள் நீடிக்காது என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கருத்து கூறிய எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, 'தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி விவசாயக் கடனை 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யாவிட்டால் குமாரசாமி அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
தென்னிந்தியாவின் நுழைவாயிலாகக் கருதப்படும் கர்நாடக மாநிலத்துக்கு அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்காக பாஜகவும், காங்கிரஸும் மிகத் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டன. மறுபுறம் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தனித்துக் களமிறங்கியது.
இறுதியில், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 இடங்களையும், மஜத கூட்டணி 38 இடங்களையும் கைப்பற்றின.
அதன் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அந்த மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் சதிராட்டங்கள் தேசிய அளவில் விவாதப் பொருளானது. ஆளுநர் அழைப்பின்பேரில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜகவின் எடியூரப்பா. ஆனால், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மூன்றே நாள்களில் தனது முதல்வர் பதவியை அவர் துறக்க நேர்ந்தது.
இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் ஆட்சியமைத்தது. முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸைச் சேர்ந்த பரமேஸ்வரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்கத் திட்டமிட்டது. அதற்காக, பேரவை நண்பகல் 12.15 மணிக்கு கூடியது. முன்னதாக, நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பேரவைத் தலைவர் தேர்தல்: பேரவை சிறப்புக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக அதன் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது எவரும் எதிர்பாராத வகையில் பாஜக சார்பில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர் சுரேஷ் குமார் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழியும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி அவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டணி அரசானது மக்கள் நலனுக்காகவே செயல்படும். தனிப்பட்ட நலன்கள் எதுவும் எங்களுக்கு இல்லை. அரசின் நடவடிக்கைகள் முழுவதும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். முக்கியத் திட்டங்கள் மற்றும் முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் கருத்தறிய நாங்கள் முற்படுவோம்.
தனிப் பெரும்பான்மையுடன் கூடிய அரசாக நாங்கள் இல்லை என்ற உண்மை எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த அரசு நிச்சயம் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும் என்பதில் மாற்றமில்லை என்றார் அவர்.
பாஜக வெளிநடப்பு: அதன் தொடர்ச்சியாக பேரவையில் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்தார். பின்னர், பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். 
இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி, காங்கிரஸ் - மஜத மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 118 பேர் குமாரசாமி அரசுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அறிவித்தார்.
அமைச்சரவை: காங்.- மஜத ஆலோசனை
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில், அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஹெச்.டி.ரேவண்ணா ஆகியோர் பங்கேற்றனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு அமைச்சரவையில் 22 இடங்களும், மஜதவுக்கு 12 இடங்களும் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலாக்காக்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com