பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: விபின் ராவத்

பாகிஸ்தான் அமைதியை விரும்பும் பட்சத்தில், எல்லைதாண்டி பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் நடவடிக்கையை அந்நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும்

பாகிஸ்தான் அமைதியை விரும்பும் பட்சத்தில், எல்லைதாண்டி பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் நடவடிக்கையை அந்நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள 5 ராணுவப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு விபின் ராவத் பேசியதாவது:
பாகிஸ்தான் உண்மையில் அமைதியை விரும்பும் பட்சத்தில், முதலில் அந்த நாடு இந்தியாவுக்குள்ளாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஊடுருவலை தடுக்கும் முயற்சியாகவே பெரும்பாலும், போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன.
எல்லைப் பகுதியில் அமைதி நிலவவே இந்தியா விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் ஏற்படுகின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில் நாமும் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படும்போது, நாம் செயலற்று இருக்க இயலாது. எல்லைப் பகுதியில் அமைதி நீடிக்க வேண்டுமென்றால், எல்லைதாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் உள்ள முகாம்களில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவது, அங்கிருந்து ஜம்மு-காஷ்மீர் வழியாக இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவது ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும். அது நிகழும் பட்சத்தில் எல்லையில் அமைதி நிலவும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 16-ஆம் தேதி முதல் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைதியான சூழல் எவ்வாறு இருக்கும், அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை காஷ்மீர் மக்கள் உணர்ந்துகொள்ளவே ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி தொடர்ந்து நிலவும் பட்சத்தில், ராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து யோசிக்கப்படும். எனினும், பயங்கரவாத நடவடிக்கைகள் நிகழ்ந்தால், சண்டை நிறுத்தத்தை ரத்து செய்வது குறித்து ராணுவம் பரிசீலிக்கும் என்று விபின் ராவத் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com