முதுகில் குத்தியவர் யார்?: பாஜகவுக்கு சிவசேனை பதிலடி

சிவசேனை முதுகில் குத்தியதாக பாஜக கூறியிருந்த நிலையில், உண்மையில் பாஜக தான் அத்தகைய செயலில் ஈடுபடுவதாக சிவசேனை பதிலடி கொடுத்துள்ளது. மேலும் பாஜக

சிவசேனை முதுகில் குத்தியதாக பாஜக கூறியிருந்த நிலையில், உண்மையில் பாஜக தான் அத்தகைய செயலில் ஈடுபடுவதாக சிவசேனை பதிலடி கொடுத்துள்ளது. மேலும் பாஜக, ஒரு மனம் பிறழ்ந்த கொலைகாரனைப் போல் செயல்படுவதாகவும், தன் வழியில் வரும் எவரையும் அக்கட்சி தாக்குகிறது என்றும் சிவசேனை கடுமையாக விமர்சித்துள்ளது.
பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு சிவசேனை துரோகம் இழைத்துவிட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறிய நிலையில், சிவசேனை இவ்வாறு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரப் பிரதேசத்தின் கபட முதல்வர் (யோகி ஆதித்யநாத்), பால்கர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக விரார் வந்தபோது சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் தனது காலணிகளை கழற்றியிருக்கவில்லை. இது சிவாஜியை அவமதிக்கும் செயல். அந்த பிரசாரத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், சிவசேனை பாஜகவின் முதுகில் குத்தியதாகக் கூறினார்.
இது, அவர்களுக்கு வரலாறு குறித்தும், சத்ரபதி சிவாஜி குறித்தும் ஏதும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் பாஜக தான் ஒரு மனம் பிறழ்ந்த கொலைகாரன் போல தன் வழியில் குறுக்கே வருபவர்களையெல்லாம் தாக்குகிறது. பால்கர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேந்திர கவித்துக்கு பாஜக வாய்ப்பளித்ததும், சிவசேனைக்கு எதிராக அக்கட்சி பேசுவதுமே உண்மையில் முதுகில் குத்தும் செயலாகும்.
முதுகில் குத்துவதைப் பற்றிப் பேசும் அருகதை தேவேந்திர பட்னவிஸுக்கோ, யோகி ஆதித்யநாத்துக்கோ இல்லை. பாலாசாஹேப் தாக்கரே உயிரோடு இருந்தபோது யார் அவரது முதுகில் குத்தியவர்களோ, அவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்கிறது. பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலாகட்டும், சமீபத்தில் நடந்த சட்டமேலவைத் தேர்தலாகட்டும், அனைத்திலும் தனித்துப் போட்டியிடவே சிவசேனை முடிவு செய்தது.
இது எதிர்கால போட்டிக்கான (மக்களவைத் தேர்தல்) தொடக்கமாகும். நாசிக், பர்பானி சட்டமேலவைத் தொகுதியில் எங்களின் வெற்றி ஒரு தொடக்கம். பால்கர் தொகுதியில் எங்கள் வெற்றி ஒரு முன்னோட்டமாக இருக்கும். வளர்ச்சியால் ஏற்படும் மாற்றமானது, மகாராஷ்டிரத்தில் அரசியலின் போக்கை மாற்றும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com