விவசாயக் கடன்களை ரத்து செய்யாவிட்டால் மே 28-இல் முழுஅடைப்பு போராட்டம்: எடியூரப்பா எச்சரிக்கை

கர்நாடகத்தில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி விவசாயக் கடன்களை ரத்து செய்யாவிட்டால் குமாரசாமி அரசுக்கு எதிராக, வரும் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று
விவசாயக் கடன்களை ரத்து செய்யாவிட்டால் மே 28-இல் முழுஅடைப்பு போராட்டம்: எடியூரப்பா எச்சரிக்கை

கர்நாடகத்தில் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி விவசாயக் கடன்களை ரத்து செய்யாவிட்டால் குமாரசாமி அரசுக்கு எதிராக, வரும் திங்கள்கிழமை முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமாரசாமி மற்றும் அவரது தந்தை தேவே கெளடா ஆகிய இருவர் மீதும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எடியூரப்பா முன்வைத்தார். குறிப்பாக, தந்தையும், மகனும் சேர்ந்து காங்கிரஸை முடித்து விடுவார்கள் என்று அவர் சாடினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய பிறகு எடியூரப்பா பேசினார். அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியை அவர் விமர்சித்தார். அவர் பேசியதாவது:
தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸும், மஜத-வும் கூட்டணி அமைத்துள்ளன. இது ஒரு பொருந்தாக் கூட்டணி.
பாஜகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதற்காகவே இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்துள்ளன.
மஜத வேட்பாளர்கள் 121 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். பதினாறு மாவட்டங்களில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தற்போதைய முதல்வர் குமாரசாமி பல துரோகங்களுக்கு பெயர் போனவர். இந்த மூழ்கும் கப்பலில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பயணம் செய்ய விரும்பினால் அதை நான் தடுக்கப்போவதில்லை.
கர்நாடகத்தில் 2006-இல் குமாரசாமி தலைமையில் பாஜக - மஜத கூட்டணி அமைய ஆதரவு அளித்ததன் மூலம் மன்னிக்க முடியாத தவறை நான் செய்துவிட்டேன். 
இருபது மாதங்கள் முதல்வராக இருந்தபோது ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டதன்படி நடந்து கொள்ளாமல் துரோகமிழைத்தவர் குமாரசாமி.
தற்போது மஜத-வுடன் காங்கிரஸ் இணைந்திருப்பது குறித்து மக்கள் கேவலமாக திட்டி வருகின்றனர். எங்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்கள் கிடைக்கவில்லை.
ஆனால், மஜத-க்கும், காங்கிரஸுக்கும் பெரும்பான்மை கிடைத்ததா? கடந்த முறை பெற்ற 122 இடங்களில் இருந்து 78 இடங்களாக காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டது. 
கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தால் 24 மணி நேரத்துக்குள், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் என அனைத்திலும் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்குறுதி அளித்தார். அதைச் செய்தால் இதயப்பூர்வமாக நாங்கள் ஆதரிக்கிறோம்.
அப்படிச் செய்யாவிட்டால், வரும் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தை நடத்தி மஜத-வுக்கு பாடம் கற்பிப்போம் என்றார் எடியூரப்பா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com