யோகி ஆட்சியில் குற்றவாளிகள் தாமாக சரண்: மோடி பேச்சு, அப்போ உன்னாவ் விவகாரம்?

யோகி ஆட்சியில் குற்றவாளிகள் தாமாக சரண்: மோடி பேச்சு, அப்போ உன்னாவ் விவகாரம்?

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் குற்றவாளிகள் தாமாக முன்வந்து சரணடைய தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் பேசினார்.

உத்தர பிரதேசத்தில் கிழக்கு புறவழி அதிவேகச்சாலையின் திறப்பு விழா பாட்கட் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அந்த சாலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் குற்றவாளிகள் தாமாக முன்வந்து சரணடைய தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். 

இந்த பேச்சு ஒரு புறம் இருக்கட்டும். யோகி ஆட்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பார்ப்போம். 

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்பவர் மீது பாலியல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு குல்தீப் சிங் செங்கார் வீட்டுக்கு சென்றிருந்த 17 வயது இளம்பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குல்தீப் சிங் மீது குற்றம்சாட்டினார். இது குறித்து பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதனை ஏற்க காவல் துறையினர் மறுத்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி அந்த பெண் லக்னௌவில் உள்ள முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன்பு நீதி கேட்டு தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு தான் இந்த விவகாரம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. 

இதற்கிடையில், அந்த பெண்ணின் தந்தை மீது ஏப்ரல் 3-ஆம் தேதி சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்ததாத குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.

இதையடுத்து, அவர் ஏப்ரல் 9-ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பிறகு, இந்த விவகாரம் நாடு முழுவதும் கூடுதல் விஸ்வரூபம் எடுத்தது. 

அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப்பின் சகோதரர் அதுல் அவரை கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காததே அவர் உயிரிழந்ததற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த குற்றத்துக்கான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக 2 காவல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் இந்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. 

இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம் குற்றம் சாற்றப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரை ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியது. 

அதன் பிறகே குல்தீப் சிங் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 

அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியது கடந்த ஆண்டு ஜூன் மாதம். அதன்பிறகு நீதி கேட்டு முதல்வர் வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றது இந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி. முதல்வர் வீட்டு முன் தற்கொலைக்கு முயன்ற பிறகு நாடே அதிர்ந்த போதும் அந்த சட்டப்பேரவை உறுப்பினரை உத்தர பிரதேச காவல் துறையினர் கைது செய்யவில்லை. 

உயர்நீதிமன்றத்தின் கேள்வி, நாட்டின் பல பகுதிகளில் கிளம்பிய எதிர்ப்பு போன்ற அழுத்தங்களுக்கு பிறகே அவர் ஏப்ரல் 13-ஆம் தேதி தான் கைது செய்யப்பட்டார். 

இது இப்படி இருக்கையில், மோடி இன்றைய கூட்டத்தில் இப்படி பேசியிருப்பது மிகப் பெரிய கேள்வியை எழுப்பிருக்கிறது. 

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய போதும் மோடி சில நாட்கள் மௌனம் காத்திருந்தது என்ற சர்ச்சை அப்போது எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com