ஆடியோ பதிவு விவகாரம்: சிவசேனைக்கு பட்னவீஸ் பதிலடி

பால்கர் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தனக்கு எதிராக சிவசேனை வெளியிட்ட ஆடியோ பதிவு திரிக்கப்பட்டது

பால்கர் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தனக்கு எதிராக சிவசேனை வெளியிட்ட ஆடியோ பதிவு திரிக்கப்பட்டது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறியுள்ளார். மேலும், திரிக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மையான வடிவம் எனக் கூறி, 14 நிமிட ஆடியோ பதிவையும் அவர் சனிக்கிழமை வெளியிட்டார்.
 அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 அந்த ஆடியோ பதிவில் நான் பேசியது முறையற்றது என்று கண்டறியப்பட்டால் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பால்கர் தொகுதியில் சிவசேனை தோற்கவுள்ளதை அக்கட்சி அறிந்துள்ளதால், இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களில் அக்கட்சி ஈடுபடுகிறது. எனது ஆடியோ பதிவை திரித்து வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது.
 அந்த ஆடியோவின் முழு பதிவு 14 நிமிடங்களாகும். அந்தப் பதிவை தேர்தல் ஆணையத்திடம் வழங்கத் தயாராக உள்ளேன். அந்தப் பதிவின் கடைசியில் "நாம் ஆட்சியில் உள்ளோம். ஆனாலும் அதிகாரத்தை நாம் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது' என்று கூறியிருந்தேன். அதை அவர்கள் அழித்து விட்டனர் என்று பட்னவீஸ் கூறினார்.
 பால்கர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தேவேந்திர பட்னவீஸ் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "பால்கர் தொகுதியில் நமக்கு எதிராக சவால் விடுபவர்கள், நமது கூட்டணி என்று சொல்லிக் கொண்டு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள், முதுகில் குத்துபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். நாம் அமைதியாக இருக்கக் கூடாது. நாம் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி, பாஜக என்றால் என்ன என்பதைக் காட்ட வேண்டும்.
 இந்தத் தேர்தலில் நாம் வெல்ல விரும்பினால், பேச்சுவார்த்தை, பணம், தண்டனை, பிரித்தாளுதல் என அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும். நமக்கு யாரும் பிரச்னை தரக் கூடாது. மாறாக, மற்றவர்களுக்கு நாம் அதனைத் தர வேண்டும். நான் உங்களுக்கு துணையாக இருக்கிறேன்' என்று பட்னவீஸ் பேசுவதாக உள்ளது.
 அந்தப் பதிவை வெளியிட்ட சிவசேனை, பட்னவீஸýக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. அந்த ஆடியோ பதிவு தொடர்பாக பட்னவீஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com