பாஜகவை வீழ்த்த ஊழல் கூட்டணி

பாஜகவை வீழ்த்துவதற்காக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியாகத் திரண்டிருக்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கருப்புப் பணத்துக்கு
பாஜகவை வீழ்த்த ஊழல் கூட்டணி

பாஜகவை வீழ்த்துவதற்காக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியாகத் திரண்டிருக்கின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே தங்களைக் காத்துக் கொள்ள இன்றைக்கு அவர்கள் கைகோக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 கர்நாடகத்தைத் தொடர்ந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதை சாடும் வகையில் இத்தகைய கருத்துகளை பிரதமர் மோடி வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகளையும், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
 இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நலத் திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
 மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபோது மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் முதன்மையானது கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதாக அளிக்கப்பட்ட உத்தரவாதம். அதில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல் அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
 அதன் காரணமாகத்தான் இன்றைக்கு நான்கு மாநிலங்களின் முன்னாள் முதல்வர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலக்கை நோக்கிய பாதையில் இம்மியளவும் பிறழாமல் இந்த அரசு நடைபோட்டுக் கொண்டிருப்பதற்கு இவைதான் சரியான சான்றுகள்.
 இந்த உண்மையை நாட்டு மக்களும் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் வாயிலாக ரூ.73,000 கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது.
 அதைத் தொடர்ந்து போலி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வரி ஏய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகள் என எத்தனையோ ஊழல் ஒழிப்பு திட்டங்களை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
 மோசமான ஆட்சி நிர்வாகம் (காங்கிரஸ் ஆட்சிக் காலம்) இருந்த நாட்டில் தற்போது நல்லாட்சி உதயமாகியிருப்பதை அனைவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர். கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் தற்போது மக்களின் பணமாக உருமாறியிருக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது.
 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படத் தொடங்கினோம். புதிய இந்தியாவை, அதுவும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தேசத்தைப் பரிணமிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினோம். அதன் தொடர்ச்சியாகத்தான் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 அவை அனைத்தும் தற்போது மிகப்பெரிய மக்கள் திட்டங்களாக உருவெடுத்துள்ளன. அதன் வாயிலாக 125 கோடி இந்திய மக்களும் இப்போது நாட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
 மத்திய அரசின் மீதும், அதன் செயல்பாடுகள் மீதும் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதுதான், எங்களுக்கு மிகப் பெரிய பலம். இந்த நாட்டு மக்களை சிரந்தாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அளித்து வரும் ஆதரவின் காரணமாகத்தான் இன்றைக்கு 20 மாநிலங்களில் பாஜக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ளது.
 அதேவேளையில், மக்களின் நம்பிக்கைக்குரிய மத்திய அரசை எதிர்க்க ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களும், பிணையில் வெளியே வந்தவர்களும் ( நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி ஜாமீனில் வெளிவந்ததைக் குறிப்பிடுகிறார்) ஓரணியாகத் திரண்டுள்ளனர். அரசியலில் பரம எதிரியாக இருந்த அவர்கள் அனைவரையும் மத்திய அரசு முன்னெடுத்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை ஒன்றிணைத்துள்ளது என்றார் பிரதமர் மோடி.
 மத்திய அரசுக்கு மதிப்பீடு வழங்க வேண்டுகோள்
 புது தில்லி, மே 26: மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு உரிய மதிப்பீட்டை அளிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 அவரது "நமோ' செயலியில் அதுதொடர்பாக கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அத்தகைய மதிப்பீட்டை அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
 மக்களின் கருத்துகளை அறிய முற்படுகிறோம்!; மத்திய அரசின் செயல்பாடுகள், அதன் திட்டங்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்கள் தங்களது கருத்துகளையும், மதிப்பீடுகளை "நமோ' செயலி வாயிலாகத் தெரிவிக்கலாம் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com