ஸ்டெர்லைட் மீண்டும் இயக்கப்படும்: வேதாந்தா அதிகாரி உறுதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கூடிய விரைவில் இயக்கப்படும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கூடிய விரைவில் இயக்கப்படும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.
 ஆலை நோக்கியுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி பணிகளை ஸ்டெர்லைட் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையில், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில், அனுமதி இல்லாமலேயே ஆலையை இயக்க ஸ்டெர்லைட் முற்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் மின் இணைப்பை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துண்டித்தது.
 ஆனால், அந்தக் குற்றச்சாட்டை வேதாந்தா அதிகாரி ராம்நாத் மறுத்துள்ளதுடன், ஆலை மீண்டும் உரிய அனுமதியுடன் இயக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
 ஆலையை வேறெங்காவது ஓரிடத்தில் அமைப்பது குறித்த சிந்தனையில் நாங்கள் இல்லை. அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் வெளிவருவோம் என்று நம்பிக்கை உள்ளது. அதற்கு நீண்டதொரு முயற்சி தேவைப்படும் என்ற போதிலும், ஆலையை கூடிய விரைவில் இயக்குவோம் என்பதை என்னால் உறுதியுடன் கூற முடியும்.
 ஆலையை இயக்க நமக்கு உரிமம் தேவைப்படுகிறது என்று எங்களது குழுமத் தலைவர் கூறியிருக்கிறார். அதேவேளையில், உள்ளூர் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதைச் செய்தால்தான் அவர்களது அனுமதியைப் பெற முடியும்.
 நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை நாங்களே மூடி விடுவோம் என்ற நிலையில், அனுமதியின்றி இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறுவதில் அர்த்தமில்லை.
 ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கான சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் ராம்நாத்.
 இந்தியாவில் காப்பருக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, உற்பத்தியை இருமடங்காக உயர்த்தும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய வேதாந்தா குழுமம் திட்டமிட்டுள்ளது. எனினும், ஆண்டுக்கு 10 சதவீத அளவில் உற்பத்தி அதிகரிக்கும் என்று ராம்நாத் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com