மன்மோகனுக்கு ஈடுகொடுக்கும் மோடி... கடைசி ஆண்டிலாவது பேசுவாரா?

பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தின் 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது தொடர்ந்து விமரிசனமாக எழுந்து வருகிறது.
மன்மோகனுக்கு ஈடுகொடுக்கும் மோடி... கடைசி ஆண்டிலாவது பேசுவாரா?

இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்று கடந்த சனிக்கிழமையுடன் 4 ஆண்டு காலம் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, பாஜகவினர் இந்த 4 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்சியில் பாஜக கொண்டுவந்த திட்டங்களின் பயன் குறித்து மோடி மக்களிடம் பெருமிதம் பேசி வருகிறார். 

ஆனால், இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் மோடி இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டியதே இல்லை. ஒரு பிரதமராக அவர் செய்தியாளர்களை சந்திக்காதது அவர்மீது தொடர்ந்து விமரிசனங்களை எழுப்பி வருகிறது. 

இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பாஜக திட்டங்களின் பயன் குறித்து மோடி தற்போது பயனாளிகளிடம் உரையாடுகிறார். நேற்று இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், இன்று முத்ரா வங்கி திட்டம் பயனாளிகள் என திட்டத்தின் பயன் குறித்து அவர் உரையாடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியிலும் அவர் நேருக்கு நேர் உரையாடவில்லை. குறிப்பிட்ட சில பயனாளிகளிடம் மட்டுமே அதுவும் டிஜிட்டல் முறையில் தான் அவர் உரையாடுகிறார். 

நாட்டு மக்கள், பிரதமரின் உரையை கேட்க வேண்டுமானால் அவருடைய மனதின் குரல் நிகழ்ச்சி அல்லது பொதுக்கூட்டங்கள் அல்லது ஏதேனும் விழாக்கள் அல்லது சமூக வலைதளங்கள் இதை தான் நாடியாக வேண்டும்.

அவரோ தான் அமைதியாக இருப்பதில்லை, மக்களுடன் தொடர்பிலேயே தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க மேற்கண்ட அடித்தளங்களை பயன்படுத்தி  தனது கருத்தை பேசி வருகிறார்.

ஆனால், மக்களின் பிரதமராக அவர் தொடர்ந்து மக்களின் தொடர்புக்கு வெளியே தான் இருந்து வருகிறார். 

ஏனென்றால், இது ஒருவகை ஒருவழிப் பாதை தான். அவர், தான் என்ன பேச வேண்டும் என்பதை தீர்மானித்து அதை மட்டும் பேசிவிட்டு சென்று விடுகிறார். அது மக்கள் தரப்பில் வரவேற்பு பெறுகிறதா, எதிர்ப்பு கிளம்புகிறதா, அதில் கேள்வி இருக்கிறதா போன்ற விமரிசனங்களுக்கு அந்த பேச்சுகள் இடமளித்தது கிடையாது.  

அவரிடம், மக்களுக்கு கேள்விகள் இருக்கலாம், விமரிசனங்கள் இருக்கலாம், பாராட்டுகள் இருக்கலாம் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், அது குறித்து மக்கள் அவரிடம் அதனை வெளிப்படுத்தவோ கேள்வி எழுப்பவோ இடமளிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.   

நாட்டில் நிகழும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பிரதமர் என்ற முறையில் அவருடைய கருத்து கேட்க வேண்டுமானால், அந்த குறிப்பிட்ட பிரச்னை நிகழ்ந்த பிறகு அவர் பங்குபெறும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்காக நாடே காத்திருக்க வேண்டும். அவர் அதுபோன்ற சமயங்களில் கூட செய்தியாளர்களை சந்தித்தது கிடையாது.  

இதற்கு முந்தைய பிரதமரான மன்மோகன் சிங் மீது வைக்கப்பட்ட மிகப் பெரிய குற்றச்சாட்டே அவர் எதுவும் பேசமாட்டார் என்பது தான். ஆனால், அவரே ஓரிரு முறையாவது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். ஒரிரு முறை செய்தியாளர்களை சந்தித்த அவருக்கே அந்த குற்றச்சாட்டு என்றால் மோடிக்கு எந்த குற்றச்சாட்டுகள் பொருந்தும். 

செய்தியாளர்களை ஒருமுறை கூட சந்திக்காமல், குறிப்பாக முக்கியான நேரங்களில் கூட செய்தியாளர்களை சந்திக்காமல் பொதுக்கூட்டங்களில், மேடைகளில் மக்களுக்கு தான் தெரிவிக்க வேண்டியதை மட்டும் தெரிவித்துவிட்டு செல்வது என்பதும் அமைதிக்கு சமமானது தான்.

நாட்டின் முக்கிய பிரச்னைகளான பீஃப் விவகாரம், உன்னாவ் மற்றும் கத்துவா போன்ற முக்கிய பிரச்னைகளின் போது முதலில் மௌனம் காத்து பல எதிர்ப்புகளுக்கு பிறகு கருத்து தெரிவிப்பது, அதுவும் அது குறித்து ஓரிரு வார்த்தைகள் தான் பேசுவது என்பது பிரதமராக உகந்ததா என்றால் சந்தேகம் தான்.

ஆனால், கோலி போன்ற பிரபலங்கள் போடும் ட்வீட்களுக்கு மட்டும் பதிலளித்து இந்த விமரிசனங்களை மோடி மறைத்துவிடுகிறார். இந்த யுத்திகள் கடந்த 4 ஆண்டுகளில் காலாவாதியாகிவிட்டது. 

அதனால், வரும் கடைசி ஆண்டிலாவது இது போன்ற யுத்திகளை கடைபிடிக்காமல், அமைதியானவர் என்ற விமரிசனங்களுக்கு மோடி முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com