35 ஆண்டுகளுக்குள் கங்கை வறண்டுவிடும்: அதிர்ச்சி தரும் ஆய்வாளர்கள்

கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இன்னும் 35 ஆண்டுகளில் முழுவதும் வறண்டு போகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
35 ஆண்டுகளுக்குள் கங்கை வறண்டுவிடும்: அதிர்ச்சி தரும் ஆய்வாளர்கள்

கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக இன்னும் 35 ஆண்டுகளில் முழுவதும் வறண்டு போகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கங்கை நதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பெருக்கெடுத்து ஓடும் நீரின் அளவு கடுமையாகக் குறைந்து ஆங்காங்கே சிறிய தீவு போன்ற மணல் திட்டுக்கள் காணப்படுகிறது. 

மத்திய அரசின் தேசிய கங்கை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கங்கை நதியை சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு ஏற்பட்டுள்ள அதீத வறட்சி ஆய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உத்தரகண்ட் பகுதியில் கங்கை நதியில் கால்வாய், தடுப்பணைகள் மற்றும் அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. வீணாகும் நதிநீரை சேமிக்கும் விதமாக இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கங்கை நதியை மட்டும் நம்பி சுமார் 45 கோடி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கங்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் கங்கையில் தூய்மை காப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கங்கை நதியின் பாதுகாப்பு குறித்து விரைவில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அது ஏரியாக மாறிவிடும் என்று ஆய்வாளர் டாக்டர் பி.டி.திரிபாதி தெரிவித்துள்ளார். அதுபோல கங்கையில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாதபோது அதில் ஆயிரம்-ஆயிரம் கோடிகளை அரசு செலவு செய்வதால் என்ன நன்மை ஏற்படும் என்றும், இதே நிலை நீடித்தால் விரைவில் கங்கை வறண்டு விடும் என்று பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரும், ஆய்வாளுமான டாக்டர் யூ.கே.சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 7 ஆயிரம் கியூபிக் அளவில் இருந்த நீரின் அளவு தற்போது 4 ஆயிரம் கியூபிக் அளவாக குறைந்துவிட்டது. அடுத்த 35 ஆண்டுகளில் வாரணாசி பகுதியில் உள்ள கங்கை நதி காணாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com