தேசிய அளவிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலின் 

தேசிய அளவிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு திமுக சார்பில் முழு ஆதரவை தருவதாக சந்திரபாபு நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தேசிய அளவிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு: ஸ்டாலின் 

தேசிய அளவிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு திமுக சார்பில் முழு ஆதரவை தருவதாக சந்திரபாபு நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

அதன் முதல் கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டினார். 

அதன் தொடர்ச்சியாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளி) சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது சந்திராபாபு நாயுடுவுடன் ஆந்திர மாநில அமைச்சர் ரமேஷ் உடன்வந்திருந்தார். 

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் அ .ராசா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றிருந்தனர்.     

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 

அப்போது, ஸ்டாலின் பேசியதாவது,  

"மத்தியில் மக்கள் விரோத, தேச விரோத, மதச்சார்பற்ற நிலைக்கு விரோதமாக செயல்பட்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டிருக்கிறார். இதுதொடர்பாக, அகில இந்திய ராகுல் காந்தியை அவர் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பை திமுக சார்பில் வரவேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

ஏற்கனவே, மாநில உரிமைகள் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

நீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ ஆகியவை சுதந்திரமாக செயல்படக்கூடிய தனிச்சையான அமைப்புகளாகும். இவற்றை மிரட்டும் நிலையிலும், அச்சுறுத்தும் நிலையிலும் தான் மோடி தலைமையிலான பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.  

எனவே, இதனை தடுக்க இந்தயாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் செயல்படவேண்டும் என்கிற நல்ல எண்ண முயற்சியில் ஆந்திர முதல்வர் ஈடுபட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் திமுக ஆதரவு வேண்டும் என்று அவர் என்னை சந்தித்து இருக்கிறார். அதற்கு எனது ஆதரவை தருவதாக உறுதியளித்து இருக்கிறேன். 

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தில்லி அல்லது வேறு ஏதேனும் ஒரு மாநிலத்தில் அனைத்து தலைவர்களும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஒப்புதல் அளித்துள்ளேன். 

வரும் காலங்களில் குறைந்தபட்ச செயல்திட்டம் தொடர்பாக நிச்சயம் ஆலோசன நடத்தப்படும்" என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com