நிதியமைச்சகம் - ஆர்பிஐ இடையேயான முரண்பாடுகள் களையப்பட வேண்டும்: பனகாரியா வலியுறுத்தல்

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்)
நிதியமைச்சகம் - ஆர்பிஐ இடையேயான முரண்பாடுகள் களையப்பட வேண்டும்: பனகாரியா வலியுறுத்தல்

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தியுள்ளார்.
 அண்மைக் காலமாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. அதில் உச்சமாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆர்பிஐ-யின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். வாராக் கடன் விவகாரத்தை ரிசர்வ் வங்கி சரிவரக் கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
 இதையடுத்து ஆர்பிஐ ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் ராஜிநாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், ஆர்பிஐ-யின் இருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ஆர்பிஐ மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இந்தச் சூழலில் பிடிஐ செய்தியாளருக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அரவிந்த் பனகாரியா இதுதொடர்பாக கூறியதாவது: அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சுதந்திரமான ஓர் அமைப்பு. அதன் செயல்பாடுகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியைப் பொருத்தவரை சட்டப்பூர்வமாக சில கட்டுப்பாடுகளும், வரையறைகளும் உள்ளன. அதை மறந்து, அமெரிக்க ஃபெடரல் வங்கியைப் போல அனைத்து விவகாரங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.
 மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இரு தரப்பும் தேசத்தின் நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அமெரிக்க அரசும், அந்நாட்டு ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டன. அதன் காரணமாகவே அமெரிக்காவால் அத்தகைய சூழலை கடந்து வர முடிந்தது.
 எனவே, அதைக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சகமும், ஆர்பிஐ-யும் இயங்க வேண்டும் என்றார் பனகாரியா.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com