பாஜக அல்லாத தளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறோம் - சந்திரபாபு நாயுடு 

தேசத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக அல்லாத தளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறோம் என்று ஸ்டாலினுடனான சந்திரப்புக்குப் பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 
பாஜக அல்லாத தளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறோம் - சந்திரபாபு நாயுடு 


தேசத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக அல்லாத தளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறோம் என்று ஸ்டாலினுடனான சந்திரப்புக்குப் பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

 அதன் முதல் கட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டினார். 

அதன் தொடர்ச்சியாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளி) சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது சந்திராபாபு நாயுடுவுடன் ஆந்திர மாநில அமைச்சர் ரமேஷ் உடன்வந்திருந்தார். 

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் அ .ராசா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றிருந்தனர்.     

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். 

அப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், 

"நாட்டை பாதுகாப்பதற்காக கூட்டணியில் இணையுமாறு ஸ்டாலினை சந்தித்தேன். நாடும் ஜனநாயகமும் அபாய நிலையில் உள்ளது. அதனால், பாஜகவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணையவேண்டும். 

சிபிஐ, ஆர்பிஐ போன்ற தனிச்சையாக செயல்படும் அமைப்புகள் களங்கப்பட்டுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி சோதனைகளை எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். ஆளுநர் நிர்வாகத்தை கூட அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். 

தற்போதைய பொருளாதாரம் மோசமாக உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் ஆனது. அதன் விளைவு என்ன? வரிகளை பெறுவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அற்புதமான அறிக்கையை வெளியிடுகின்றனர்.  

கறுப்பு பணம் அனைத்தும் வெள்ளையாகிவிட்டது. இதனால், யாருக்கு என்ன பயன்? வங்கிகள் கூட நம்பிக்கையை இழந்துள்ளனர். 

நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். வாராக்கடன் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 

விவசாயப் பிரச்னை உள்ளது. வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. சகிப்புத் தன்மை இல்லை.  

இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்திக்கவுள்ளேன். அவருடன் தொடர்பில் தான் இருக்கிறேன். வேறுபாடுகள் இருந்தாலும், ராகுல் காந்தியை சந்தித்தேன். நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணையவேண்டும்.  

நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவேண்டும். நான் அனைவரையும் ஒன்றிணைக்கிறேன். ஒன்றிரண்டு நபர்களுடன் வேறுபாடு இருக்கலாம். இருப்பினும், தேசத்தை பாதுகாக்க ஒன்றிணைகிறோம். நேற்று, குமாரசாமி மற்றும் தேவெ கௌடாவையும் சந்தித்தேன். 

கலைஞருடன் நீண்ட உறவு இருந்திருக்கிறது. தற்போது திமுகவுடன் நல்லுறவில் தான் இருக்கிறோம்.  

அதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அல்லாத ஒரு தளத்தில் ஒன்றிணைகிறோம். 

அனைவரையும் ஒரு தளத்தில் ஒன்றிணைக்கும் செயலை தான் நான் செய்துள்ளேன். அதை எப்படி முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். 

தேசத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பது தான் அவசியம். அதனால், வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுசேர வேண்டும். 

மக்கள் தற்போது தயாராக உள்ளனர். தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எந்த நன்மை கிடைத்துள்ளது. சொந்த பணத்தை எடுப்பதற்காக மக்கள் பல நாட்கள் வரிசையில் நின்றனர். தற்போது கூட ஏடிஎம்-இல் பணம் வரவில்லை. நாடு மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் ஏதாவது செய்தார்களா?  நாட்டில் பல்வேறு தலைவர்கள் உள்ளனர். 

அரசியல் மற்றும் தனிநபர்கள் குறித்து பேசவேண்டாம். ஸ்டாலின் கூட மோடியைவிட சிறந்த தலைவர் தான். 

அதனால், நாட்டை பற்றியும், ஜனநாயகத்தை பற்றியும் பேசவேண்டும். ஜனநாயகம் இல்லாவிட்டால் அரசியல் கட்சிகளுக்கான தேவையே இல்லாமல் போய்விடும். தமிழ்நாட்டில் எப்படி என்று தெரியவில்லை. தில்லியில் ஊடகங்கள் அஞ்சுகின்றன. 

மேற்கு வங்கத்தில் மம்தா, ஆந்திராவில் நான், தமிழகத்தில் ஸ்டாலின் மற்றும் கர்நாடகாவில் தேவெ கௌடா ஆகியோர் வலுவாக இருக்கிறோம். அதனால், பாஜகவை எதிர்க்க நாங்கள் ஒன்றிணைகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com