பாஜகவின் தோல்வியால் காங்கிரஸுக்கு நல்ல காலம்: சிவசேனை விமர்சனம்

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு 2019-இல் நல்ல காலம் பிறக்கும் என்பதை உணர முடிகிறது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு 2019-இல் நல்ல காலம் பிறக்கும் என்பதை உணர முடிகிறது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.
 கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த பாஜக, ஒரேயொரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது.
 மகாராஷ்டிர அரசிலும், மத்திய அரசிலும் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சியான சிவசேனை, பாஜகவுக்கு ஏற்பட்ட இத்தோல்வி குறித்து விமர்சித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பத்திரிகையான "சாம்னா' நாளிதழில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 உத்தரப் பிரதேசத்தில் தொடங்கிய இடைத்தேர்தல் தோல்வி, தொடர்ந்து நீடித்து வருவது குறித்து பாஜக சுயஆய்வை மேற்கொள்ள வேண்டும். பாஜகவே கூறிக் கொள்வதன்படி நாட்டில் பல நல்ல விஷயங்களும், புரட்சிமிகு மாற்றங்களும் நடைபெற்று வரும் இந்த வேளையில், தோல்விகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? பாஜகவுக்கு ஏற்படும் இத்தோல்விகளால் காங்கிரஸுக்கு புதுவாழ்வு கிடைக்கும் போலத் தோன்றுகிறது.
 கடந்த 2014-ஆம் ஆண்டில் நிலவிய மோடி அலை தற்போது என்னவாயிற்று என்று கூட்டணிக் கட்சிகள் ஆச்சரியமடையக் கூடும். காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்றும் ஏழைகளுக்கான நல்ல காலத்தை கொண்டு வருவோம் என்றும் பாஜக பேசி வந்தது. எனினும், 4 ஆண்டுகளுக்குள்ளாகவே, காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வசனம் வீழ்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரஸுக்குத்தான் நல்ல காலம் தொடங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனதாலேயே பாஜகவுக்கு இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்டு வருகின்றன என்று சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com