18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மேல்முறையீடு வேண்டாம் என்ற முடிவுக்கு சசிகலா சம்மதம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மேல்முறையீடு வேண்டாம் என்ற முடிவுக்கு சசிகலா சம்மதம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
 சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் சசிகலாவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியது:
 தீபாவளிப் பண்டிகையையொட்டி எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினோம். எங்களுக்குள் கருத்து மோதல் எதுவும் இல்லை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததோடு, இடைத் தேர்தலை சந்திப்பது சரியானதுதான் எனக் கூறினார். ஏராளமான பொதுமக்கள் மக்கள் மன்றத்தில் தேர்தலைச் சந்திக்கவும் என கடிதம் எழுதியுள்ளதாகவும் சசிகலா எங்களிடம் தெரிவித்தார். அதன்படி ஒருமித்த முடிவோடு நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளோம்.
 "சர்கார்' படம் விவகாரம் தேவையற்ற ஒன்று. நாட்டில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் அந்தப் படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணுகுமுறை தவறானது.
 முதல்வராக ஜெயலலிதா அறிவித்த இலவச திட்டங்களான மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்றவற்றை எரிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுக வழங்கிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சேர்த்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஒருதலைபட்சமாக படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
 ஆளுங்கட்சியினர் படத்துக்கு தேவையற்ற விளம்பரத்தைத் தேடித் தருகின்றனர். தற்போது போராட்டத்தில் ஈடுபடும் அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற போது ஏன் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
 ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக அரசுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். திமுக இருக்கும் எந்த கூட்டணியிலும் அமமுக இணையாது. அமமுக இடைத் தேர்தலுக்காக தயாராகி அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களையும் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
 "தேவர்மகன்' முதல் பாகம் நல்ல படம். அதில் ஜாதி கலவரத்தை தூண்டும் வண்ணம் காட்சிகள் இடம் பெறவில்லை. "தேவர்மகன்' படத்தில் கமல்ஹாசன் நடித்தபோது அவர் ஒரு நடிகராக இருந்தார். தற்போது அரசியல் கட்சித் தலைவராக உள்ளார். அதனை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றார் தினகரன்.
 எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி பிரபு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல், முத்தையா, சுந்தரராஜன், ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 12 பேர் டிடிவி தினகரனோடு சிறையில் சசிகலாவைச் சந்தித்து பேசினர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com