பெருநிறுவன நண்பர்களின் ஒப்புதலின்றி மோடி எதையும் செய்வதில்லை

பிரதமர் நரேந்திர மோடியும், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கும், தங்களுக்கு நண்பர்களாக இருக்கக் கூடிய பெரும் தொழிலதிபர்களிடம் அனுமதி பெறாமல் எதையுமே செய்வதில்லை என்று
பெருநிறுவன நண்பர்களின் ஒப்புதலின்றி மோடி எதையும் செய்வதில்லை

பிரதமர் நரேந்திர மோடியும், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கும், தங்களுக்கு நண்பர்களாக இருக்கக் கூடிய பெரும் தொழிலதிபர்களிடம் அனுமதி பெறாமல் எதையுமே செய்வதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
 சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெறவுள்ள, முதல்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, கான்கெர் மாவட்டத்தின், பகஞ்சோரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
 தில்லியில் பிரதமர் மோடிக்கு 10 முதல் 15 தொழிலதிபர்கள் நண்பர்களாக உள்ளனர். அதேபோன்று சத்தீஸ்கர் முதல்வருக்கும் 10 முதல் 15 தொழிலதிபர்கள் நண்பர்களாக உள்ளனர். அந்த நண்பர்களின் அனுமதியின்றி மோடியும், ரமண் சிங்கும் எதையுமே செய்ததில்லை.
 மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, ஆண்டு ஒன்றுக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.35,000 கோடி தேவைப்பட்டது. நாட்டில் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை அத்திட்டம் மாற்றியமைத்தது.
 ஆனால், மோடி பிரதமரான பிறகு, கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 முதல் 15 தொழிலதிபர்களுடைய கடனை ரூ.3.50 லட்சம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்திருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு, 10 ஊரக வேலை உறுதித் திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம்.
 ரஃபேல் முறைகேடு: அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கவிருந்த, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பறித்து, அனில் அம்பானிக்கு மோடி வழங்கிவிட்டார்.
 பிரான்ஸ் அரசிடம் முந்தைய காங்கிரஸ் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின்படி, ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற மதிப்பீட்டின்படி 126 விமானங்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு விமானத்தை ரூ.1,600 கோடி கொடுத்து வாங்கும் அளவுக்கு ஒப்பந்தத்தை மோடி மாற்றிவிட்டார்.
 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்திருந்தார். இரண்டு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
 ஊழல் புகார்கள்: நகை வணிகர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, மதுஆலை அதிபர் விஜய் மல்லையா, கறைபடிந்த கிரிக்கெட் நிர்வாகஸ்தர் லலித் மோடி ஆகியோர் ஆயிரக்கணக்கான கோடிகளுடன் நாட்டை விட்டு ஓடிவிட்டனர்.
 தன்னுடைய ஒவ்வொரு உரையிலும் ஊழலுக்கு எதிராகப் பேசுவதை மோடி வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது ஊழலுக்கு எதிராக அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. ஏனென்றால் ரஃபேல் ஒப்பந்தம் மூலமாக ரூ.30,000 கோடி திருடப்படுவதை அவர் அனுமதித்துவிட்டார் என்றார் ராகுல் காந்தி.
 சத்தீஸ்கரில் விவசாயக் கடன் தள்ளுபடி...
 சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாள்களுக்குள்ளாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 பாஜகவைப் போல பொய்யான வாக்குறுதிகளை அளிக்க நாங்கள் விரும்புவதில்லை. பஞ்சாப்பிலும், கர்நாடகத்திலும் தேர்தல் நடைபெற்றபோது விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ராகுல் காந்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com