வஜ்ரா உள்பட 3 புதிய ரக பீரங்கிகள் ராணுவத்தில் சேர்ப்பு

இந்திய ராணுவத்தில் கே-9 வஜ்ரா, எம்777 உள்ளிட்ட மூன்று வகை பீரங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள தேவ்லாலி பீரங்கி பயற்சி தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
வஜ்ரா உள்பட 3 புதிய ரக பீரங்கிகள் ராணுவத்தில் சேர்ப்பு

இந்திய ராணுவத்தில் கே-9 வஜ்ரா, எம்777 உள்ளிட்ட மூன்று வகை பீரங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேயுள்ள தேவ்லாலி பீரங்கி பயற்சி தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பீரங்கிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
 இதில் எம்777 பீரங்கிகள் அமெரிக்க தயாரிப்பாகும், அண்மையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் இந்த ரக பீரங்கிகளைத்தான் பயன்படுத்தியது. எடை குறைவான இந்த பீரங்கி, மிகவும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹெலிகாப்டரில் வைத்து மலைப் பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்காவிடம் இருந்து மொத்தம் 147, எம்777 ரக பீரங்கிகளை வாங்க இந்தியா கடந்த நவம்பர் 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் விலை ரூ.5,070 கோடியாகும்.
 கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் ஸ்வீடனிடம் இருந்து ஃபோபர்ஸ் பீரங்கிகள் இந்திய ராணுவத்துக்காக வாங்கப்பட்டன. அதன் பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் புதிய ரக பீரங்கிகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது 10 எம்777 பீரங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை 30 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறனுடையவை.
 கே-9 வஜ்ரா பீரங்கிகள் தென்கொரிய தயாரிப்பாகும். அந்நாட்டில் இருந்து பெறப்பட்ட உதவி மூலம் அந்த பீரங்கிகள் இப்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு வகை பயன்பாட்டுக்கு உதவும் வகை பீரங்கி வாகனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
 ஃபோபர்ஸ் பீரங்கிகளுக்குப் பிறகு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல நவீன ஆயுதங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளன. கே-9 பீரங்கிகளில் முதல் 10 பீரங்கிகள் மட்டும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதன் பிறகு, சில முக்கிய பாகங்கள் மட்டும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, இந்த பீரங்கி உருவாக்கப்பட்டது.
 இப்போது 90 புதிய பீரங்கிகளை நாம் உருவாக்கியுள்ளோம். மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் இந்த பீரங்கி வடிவமைப்பில் முழுமையாக கைகொடுத்தது என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com