தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்
தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துவிட்டார் மோடி: ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தொடர்ந்து 2ஆவது நாளாக சனிக்கிழமையும் பிரசாரம் மேற்கொண்டார். சரமாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
 கடந்த 4-5 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்து விட்டார்.
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.35,000 கோடி தேவையாகும். ஆனால், அதை விட 10 மடங்கு அதிக தொகையை தனக்கு பிடித்தமான 15 தொழிலதிபர்களுக்கு மோடி அளித்துள்ளார்.
 மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் விவசாய பொருள் உற்பத்தி மையங்களாக உருவாக வேண்டும். நாட்டுக்கே காய்கறி, பழங்கள், உணவு பொருட்களை அளிக்கும் பகுதிகளாக மாற வேண்டும்.
 இதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பமாகும். தனக்கு பிடித்தமான 15 பேருக்கு நாட்டின் வளங்களை அளிக்க வேண்டும் என மோடி நினைக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், பழங்குடியினருக்கு அவற்றை அளிக்க வேண்டும் என நினைக்கிறது. 15 பேரை மட்டுமே மோடி நம்புகிறார்; காங்கிரஸ் கட்சியோ கோடான கோடி மக்களை நம்புகிறது.
 சத்தீஸ்கரை ஆளும் ரமண் சிங் அரசு ஊழலில் திளைக்கிறது. சிட் பண்ட் ஊழல் மூலம் ரூ.5,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 310 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதை முதல்வர் ரமண் சிங் விரும்பவில்லை.
 சத்தீஸ்கரில் பொது விநியோக திட்டத்தில் நடைபெற்ற ஊழல் மூலம் ரூ.36,000 கோடி திருடப்பட்டுள்ளது. இதில் ரமண் சிங்குக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களும் உள்ளன.
 விசாரணையில் கைப்பற்றப்பட்ட டைரியில், டாக்டர் சாகேப்புக்கு பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் அந்த டாக்டர் சாகேப்? இதுகுறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும். பனாமா ஆவணங்களில் பெயர் இடம்பெற்றிருக்கும் தனது மகன் மற்றும் பிற நபர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
 கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் ரமண் சிங் முதல்வராக உள்ளார். ஆனால் மாநிலத்தில் இன்னமும் 40 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். 65 சதவீத நிலத்தில் விவசாயமே நடக்கவில்லை.
 பழங்குடியினரிடம் இருந்து 56,000 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு, முதல்வரின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை விடுத்து, மாநிலத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ரமண் சிங் அரசு நியமித்துள்ளது.
 சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதை முடிவுக்கு கொண்டு வரும். இதேபோல், சொந்தமாக நிலமில்லாத நபர்களுக்கு, இலவசமாக நிலம் கொடுக்கப்படும்.
 குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சாதகமாக இல்லாமல், அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் காங்கிரஸ் பணியாற்றும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com