படேல் சிலையைக் காண ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் வருகை

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையைக் காண சனிக்கிழமை மட்டும் 27 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையைக் காண சனிக்கிழமை மட்டும் 27 ஆயிரம் பேர் வருகை தந்தனர். சிலை திறக்கப்பட்டதில் இருந்து இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வந்தது இதுவே முதன்முறை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 ஞாயிற்றுக்கிழமை அதைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் வருகை தர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளி விடுமுறை என்பதால் கூட்டம் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.
 குஜராத்தின் சரோவர் நீர்த்தேக்கம் அருகே 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 33 மாதங்களில் நிறைவடைந்தன.
 சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் கட்டுமானத்துக்குகு 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு கட்டுமான பொருள்கள், 1,700 டன் வெண்கலம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
 இதையடுத்து, உலகிலேயே உயரமான சிலையாக கருதப்பட்டு வந்த சீனாவின் "ஸ்பிரிங் டெம்பிள்' புத்தர் சிலையை பின்னுக்குத் தள்ளி சர்தார் வல்லபபாய் படேல் சிலை புதிய சாதனையை படைத்தது. இந்த பிரம்மாண்ட சிலையின் உள்பகுதியில் 200 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் சென்று அங்கிருந்தபடி சாத்புரா, விந்திய மலைப்பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். சர்தார் சரோவர் நீர்த்தேக்கம், கருடாஸ்வேர் நீர்த்தேக்கம் ஆகியவற்றையும் பார்வையிடலாம். 135 அடி வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்காக 2 மின் தூக்கிகள் சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com