மத்திய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு!

மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்திய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு!

மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை விமர்சித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஆந்திர முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
 அடுத்த 6 மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்னெடுத்துவிட்டன. அண்மைக் காலமாக நாடு முழுவதும் பாஜக அடைந்து வரும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக காங்கிரஸ் தலைமையில் மகா கூட்டணி அமைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 அந்த வரிசையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
 கர்நாடக முதல்வர் குமாரசாமி, அவரது தந்தையும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவெ கெளடா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். அதேபோன்று தமிழகம் வந்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார்.
 இதை விமர்சித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கேற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள்' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அமராவதியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு, இதுதொடர்பாக கூறியதாவது:
 நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசி வருகிறது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஓரணியில் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். அதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரை அண்மையில் சந்தித்துப் பேசினேன்.
 அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியையும் வரும் 19 அல்லது 20-ஆம் தேதியில் சந்திக்க உள்ளேன். பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தில்லியில் வரும் 22-ஆம் தேதி விவாதிக்க உள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அப்போது ஆலோசிக்கப்படும்.
 மத்திய பாஜக அரசு மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது. தில்லியின் கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசே செயல்பட்டு வருகிறது என்றார் சந்திரபாபு நாயுடு.
 முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு வந்து அவரைச் சந்தித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com