ஓராண்டில் 25 இடங்களின் பெயர்கள் மாற்றம்: மத்திய அரசு ஒப்புதல்

கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள 25 இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் உள்ள 25 இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கிராமங்கள், நகரங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 25 இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஓராண்டில் தனது ஒப்புதலை அளித்துள்ளது.
 இதில் ஆந்திர மாநிலத்திலுள்ள ராஜமுந்திரி பகுதியை ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிஸா மாநிலத்திலுள்ள வீலர் தீவின் பெயரை அப்துல்கலாம் தீவு என்றும், கேரள மாநிலம் அரிகோட்டுக்கு அரிகோடி என்றும், ஹரியாணா மாநிலம் பிந்தாரிக்கு பண்டு-பிந்தாரா என்றும், நாகாலாந்து மாநிலம் சாம்பூருக்கு சான்புரே என்றும் பெயர்கள் மாற்றுவது தொடர்பான திட்டங்கள் அடங்கும். மகாராஷ்டிரம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாதின் பெயர் பிரயாக்ராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்றும் மாற்றுவது தொடர்பான திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவில்லை. நாகாலாந்து மாநிலம் திமாபூர் மாவட்டத்திலுள்ள கசாரிகோனுக்கு பெவீமா என்று பெயர் மாற்றுவது தொடர்பான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.
 மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை "பங்க்ளா' என்று மாற்றுவது தொடர்பான திட்டம், அந்த மாநில அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த பெயரும், அண்டை நாடான வங்கதேசத்தின் (பங்க்ளாதேஷ்) பெயரும் உச்சரிப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தை இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து அதன் கருத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
 பொதுவாக நாட்டிலுள்ள ஏதேனும் பகுதி அல்லது இடத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான திட்டம், மாநில அரசுகளிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டால், அதன்மீது முடிவெடுப்பதற்கு முன்பு, ரயில்வே அமைச்சகம், தபால் துறை, நில அளவியல் துறை ஆகியவற்றுடன் மத்திய உள்துறை அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தும். அப்போது நாட்டில் வேறு ஏதேனும் பகுதிக்கு அப்பெயர் உள்ளதா? என கேட்டறியும்.
 அந்த பெயர் வேறு பகுதிகளுக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபிறகே, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலை அளிக்கும்.
 ஒரு மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனில், அதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு வேண்டும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com