காஷ்மீருக்குள் ஊடுருவும் திட்டத்துடன் எல்லையில் 160 பயங்கரவாதிகள்: இந்திய ராணுவம்

காஷ்மீருக்குள் ஊடுருவும் திட்டத்துடன் எல்லையில் 160 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

காஷ்மீருக்குள் ஊடுருவும் திட்டத்துடன் எல்லையில் 160 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.
 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த 2016ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதலை தொடுத்தது. இந்த தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்டினென்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் ஆவார்.
 இவர், நக்ரோடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் 16ஆவது படைப்பிரிவான "வொயிட் நைட்' படைப்பிரிவின் ஜெனரல் கமாண்டிங் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். ஜம்முவில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவும் திட்டத்துடன், எல்லையில் பாகிஸ்தான் பகுதிகளில் 140 முதல் 160 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
 காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, பயங்கரவாத தாக்குதலை நடத்த செய்வது தொடர்பான திட்டத்தை ஐஎஸ்ஐ உளவு அமைப்பும், பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தீட்டி வருகின்றன. எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் முடிவுக்கு வந்துவிட்டது.
 பாகிஸ்தான் பகுதிக்குள் நமது ராணுவம் அத்துமீறி தாக்குதலை நடத்துவதில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கையை பாகிஸ்தான் வெளியிடுவதில்லை.
 பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடும், கொள்கையும் மாற வேண்டும். அப்போதுதான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வரும். எல்லையில் ஊடுருவல்காரர்களின் முயற்சியை முறியடிப்பதற்கும், தகுந்த பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று பரம்ஜித் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com