நவ. 19-இல் ரிசர்வ் வங்கி வாரியக் குழு கூட்டம்

பரபரப்பான சூழலில் ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டம், வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பரபரப்பான சூழலில் ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டம், வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மூலதன வரைவுத் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பது, மத்திய அரசுக்கு நிதியுதவி அளிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
 ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-ஆவது பிரிவு இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துவது குறித்து முதல் முறையாக மத்திய நிதியமைச்சகம் விவாதித்து வருகிறது.
 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் அளவை வங்கிகள் அதிகரிக்கச் செய்ய வேண்டும்; கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்துகிறது.
 ஆனால், பண வீக்க விகிதம், வாராக் கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
 இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டம், வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக, வாரியக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.
 எனினும், திட்டமிடப்படாத சில விஷயங்கள் குறித்து வாரியக் குழு உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரிசர்வ் வங்கி வாரியக் குழுவின் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 மத்திய அரசுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் மூலதன வரைவுத் திட்டத்தை தயாரிப்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் சிலர், வாரியக் குழு கூட்டத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக ரூ.9.59 லட்சம் கோடி உள்ளது. அதில், மூன்றில் ஒரு பங்கு தொகையை, அதாவது ரூ.3.6 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு கேட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால், அவ்வாறு வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
 ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு நிதி கோரவில்லை என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க் கூறினார். எனினும், ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகையை அரசின் கருவூலத்துக்கு மாற்றுவது உள்பட மூலதன வரைவுத் திட்டம் வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com