நிதி நிறுவன மோசடி வழக்கு: ஜனார்தன ரெட்டி கைது

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி, நிதி நிறுவன மோசடி வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
நிதி நிறுவன மோசடி வழக்கு: ஜனார்தன ரெட்டி கைது

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி, நிதி நிறுவன மோசடி வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
 இதுகுறித்து காவல்துறை குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் அலோக் குமார் கூறியதாவது:
 நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக, கர்நாடக காவல்துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜரான ஜனார்தன ரெட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் விசாரணை நடைபெற்றது.
 பின்னர் 6-ஆவது கூடுதல் பெருநகர தலைமை நீதிபதி முன்னிலையில் ஜனார்தன ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 24-ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்று அலோக் குமார் கூறினார்.
 முன்னதாக, ஜனார்தன ரெட்டியோடு அவரது நெருங்கிய உதவியாளர் அலி கானும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
 எனினும், செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கெனவே அலி கான் ஜாமீன் பெற்றுள்ளதால், அவரைக் கைது செய்வதில் நுட்பச் சிக்கல்கள் நீடிப்பதாக காவல்துறையினர் விளக்கமளித்தனர்.
 பின்னணி: அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 600 கோடி வரை பொதுமக்களிடம் மோசடி செய்தது தொடர்பாக ஹாம்பிடென்ட் மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளரும், பெங்களூரைச் சேர்ந்தவருமான சையது அகமது ஃபரீத் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். விசாரணையில், தன் மீதான வழக்குகளை தனக்கு சாதகமாக மாற்ற ஜனார்தன ரெட்டி, அவரது உதவியாளர் அலிகான் ஆகியோருக்கு ரூ. 20 கோடி வரை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதாகவும், பணத்துக்கு இணையாக தங்கத்தை பெல்லாரியைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ரமேஷின் மூலம் கொடுத்ததாகவும் சையது அகமது தெரிவித்துள்ளார்.
 ஏற்கெனவே நிலக்கரி சுரங்க முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஜனார்தன ரெட்டி மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி மோசடி தொடர்பாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 இந்நிலையில், ஜனார்தன ரெட்டி தலைமறைவாக உள்ளதாக அறிவித்த கர்நாடக போலீஸார், அவரை தேடி வந்தனர். விசாரணைக்காக நேரில் ஆஜராக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், காவல்துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஜனார்தன ரெட்டி தனது வழக்குரைஞர்களுடன் சனிக்கிழமை ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com