சபரிமலை சர்ச்சை: மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அந்த மனுக்களை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 பெண்ணிய ஆர்வலர்களும், முற்போக்குவாதிகளும் அந்தத் தீர்ப்பை ஒருபுறம் வரவேற்றாலும், மறுபுறம் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்தத் தீர்ப்பின் மூலம் பாரம்பரியமாக பின்பற்றுபட்டு வரும் மதச் சம்பிரதாயங்கள் சிதைக்கப்படக் கூடும் என்பது அவர்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு.
 இந்நிலையில், தீர்ப்பின் தொடர்ச்சியாக கேரளத்தில் பலத்த போராட்டங்களும், பதற்றமான சூழல்களும் உருவாகின. குறிப்பாக, பெண்களே சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கேரள மாநில காங்கிரஸும், பாஜகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 இதற்கு நடுவே தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 48 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை அவசர வழக்காக கருதி மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மறுஆய்வு மனுக்களை செவ்வாய்க்கிழமை (நவ. 13) விசாரிப்பதாகத் தெரிவித்தது.
 அதன்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அந்த மனுக்களை விசாரிக்க உள்ளனர்.
 கேரள அரசு எதிர்ப்பு: இதனிடையே, சபரிமலை கோயிலில் ஹிந்து அல்லாதோர், சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதோரை அனுமதிக்க தடை விதிக்கக் கோரி பாஜக பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை மதப் பாகுபாடுகளைக் கடந்த ஓர் ஆலயம் என்றும், அங்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தடை விதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com